Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 28 ஜூன் (ஹி.ச.)
பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ், கிராமப்புற மக்களுக்கு ஆண்டுக்கு 125 நாள் வேலை வழங்கும் புதிய வேலை உறுதித் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்துமா என்பது குறித்து உடனடியாக தனது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசு 'Viksit Bharat – Guarantee for Rozgar and Ajeevika Mission – Gramin' என்ற பெயரில் 125 நாள் வேலை உறுதித் திட்டத்தை ஜூலை 1 முதல் அமல்படுத்த உள்ளதாகவும், இதற்காக நாடு முழுவதும் ரூ.95,692 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதில் தமிழகத்திற்கு ரூ.7,957.57 கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மட்டுமே இத்திட்டத்தை செயல்படுத்த அறிவிக்கை வெளியிட்டுள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தென்னிந்தியாவில் ஆந்திரப் பிரதேசம், கேரளம் மற்றும் புதுச்சேரி ஆகியவை இத்திட்டத்தை செயல்படுத்துவதாக அறிவித்துள்ள நிலையில், தமிழ்நாடு அரசு இதுவரை எந்த முடிவையும் அறிவிக்காதது கேள்விகளை எழுப்புவதாக அவர் கூறியுள்ளார்.
மாநில அரசின் நிதிப் பங்கு 40 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதால் கூடுதல் நிதிச்சுமை ஏற்படுவதுடன், பணிகளைத் தேர்வு செய்வதில் மத்திய அரசுக்கே அதிக அதிகாரம் வழங்கப்படுவது மாநில உரிமைகளை பாதிக்கக் கூடும் என்ற எதிர்ப்புகளும் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழகம் இத்திட்டத்தை செயல்படுத்தினால், மாநில அரசு தனது பங்காக ரூ.5,305.04 கோடி ஒதுக்க வேண்டும் என்றும், மொத்தம் ரூ.13,262.61 கோடி நிதியுடன் 27.68 கோடி மனித வேலைநாள்களை உருவாக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார். ஆனால், தற்போது வேலைவாய்ப்பு பெறும் குடும்பங்களின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டால், ஒவ்வொரு குடும்பத்திற்கும் சராசரியாக 39.69 நாட்கள் மட்டுமே வேலை கிடைக்கும் என்றும், முந்தைய ஆண்டுகளை விட இது குறைவாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மாறாக, புதிய திட்டத்தை தமிழக அரசு ஏற்காவிட்டால், தற்போதைய மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மீதமுள்ள ரூ.440.90 கோடியை மட்டுமே பயன்படுத்த முடியும் என்றும், அதன்மூலம் சராசரியாக 1.30 நாள் வேலை மட்டுமே வழங்க இயலும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதன் பிறகு மாநில அரசு தனது சொந்த நிதியிலேயே வேலைவாய்ப்புகளை வழங்க வேண்டிய நிலை உருவாகும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
எனவே, 125 நாள் வேலை உறுதித் திட்டத்தின் சாதக, பாதகங்களை ஆய்வு செய்து, அதை தமிழ்நாட்டில் செயல்படுத்துமா என்பதை தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் என்றும், செயல்படுத்தவில்லை என்றால், தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தபடி ஆண்டுக்கு 150 நாள் வேலை வழங்கும் மாற்றுத் திட்டம் என்ன என்பதையும் அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / GOKILA arumugam