ஆகஸ்டுக்குள் மழைநீர் வடிகால்வாய் பணிகளை முடிக்க வேண்டும் - மாநகராட்சி அதிகாரிகளுக்கு ஆணையர் உத்தரவு
சென்னை, 29 ஜூன் (ஹி.ச.) வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால்வாய் மற்றும் வெள்ளத் தடுப்பு பணிகளை வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் முழுமையாக நிறைவு செய்ய வேண்டும் என்று பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் அனைத்து மண்டல அலுவல
Cannal


Corporation


சென்னை, 29 ஜூன் (ஹி.ச.)

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால்வாய் மற்றும் வெள்ளத் தடுப்பு பணிகளை வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் முழுமையாக நிறைவு செய்ய வேண்டும் என்று பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் அனைத்து மண்டல அலுவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.

மழைநீர் வடிகால்வாய் அமைப்பில் இணைப்பு இல்லாமல் உள்ள பகுதிகளை தனிக் கவனத்துடன் ஆய்வு செய்து, அவற்றை உடனடியாக இணைத்து பணிகளை முடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மழைநீர் வடிகால்வாய்களில் குப்பைகள் கலப்பதைத் தடுத்து, மழைநீர் மட்டும் சீராக செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ள ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வண்டல் சேகரிப்புத் தொட்டிகளை தொடர்ந்து தூர்வார வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதுவரை 36,982 வண்டல் சேகரிப்புத் தொட்டிகளில் 1,849.10 மெட்ரிக் டன்களுக்கு மேற்பட்ட வண்டல் மண் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பெருநகர சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள 44 நீர்வழிக் கால்வாய்களிலும் தூர்வாரும் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும், தடுப்புச் சுவர் கட்டப்படும் பகுதிகளில் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக விருகம்பாக்கம் கால்வாய், ஓட்டேரி நல்லா கால்வாய், வீராங்கல் ஓடை உள்ளிட்ட அனைத்து முக்கிய கால்வாய்களிலும் தூர்வாருதல் மற்றும் பராமரிப்புப் பணிகளை விரைவாக நிறைவு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மழைநீரை அதிகளவில் சேமிக்கும் நோக்கில் நடைபெற்று வரும் குளங்கள் மேம்பாட்டுப் பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என்றும், மழைநீர் வடிகால்வாய்கள் சந்திக்கும் இடங்கள் மற்றும் நீர்வழிக் கால்வாய்கள் அடையாறு ஆறு, கூவம் ஆறு, பக்கிங்காம் கால்வாய் ஆகியவற்றுடன் இணையும் பகுதிகளில் உள்ள அடைப்புகளை அகற்றி, மழைநீர் தங்கு தடையின்றி செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பள்ளிக் கட்டடங்கள், சாலை மேம்பாட்டுப் பணிகள், நாய்கள் இனக்கட்டுப்பாட்டு மையங்கள், கால்நடை காப்பகங்கள், பாலப்பணிகள் உள்ளிட்ட அனைத்து வளர்ச்சித் திட்டப் பணிகளையும் சம்பந்தப்பட்ட துறைகளுடன் ஒருங்கிணைந்து விரைந்து முடிக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ