மோசடி வழக்கில் சிக்கிய பெண் காவல் ஆய்வாளருக்கு முன் ஜாமீன் வழங்க மறுப்பு
சென்னை, 29 ஜூன் (ஹி.ச.) சென்னை ராயபுரம் மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றியவர் ஷீலா மேரி. இவர் தனது உறவினரான பிரபு மணி மூலமாக ஒரு நிறுவனத்தை தொடங்கி, அதன் மூலம் தங்கத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம், குறைந்த விலையில் தங
Madras High Court


சென்னை, 29 ஜூன் (ஹி.ச.)

சென்னை ராயபுரம் மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றியவர் ஷீலா மேரி. இவர் தனது உறவினரான பிரபு மணி மூலமாக ஒரு நிறுவனத்தை தொடங்கி, அதன் மூலம் தங்கத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம், குறைந்த விலையில் தங்க காசுகள் கிடைக்கும் என ஆசை வார்த்தைகளை கூறி முதலீட்டு திட்டங்களை அறிமுகம் செய்துள்ளார்.

இந்த அறிவிப்புகளை நம்பி கடந்த 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டு வரை 200-க்கும் மேற்பட்டோர் பிரபு மணி நடத்தி வந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர். பிரபு மணி பெரும்பாலும் ஆய்வாளர் ஷீலா மேரியின் காவல் துறை வாகனத்திலேயே வைத்து, மக்களவைத் தேர்தல் நேரத்தில் தங்கக் காசுகளை வழங்கியுள்ளார்.

குறிப்பாக இவர்களிடம் காவல் துறையினரும், காவல்துறை அதிகாரிகள் பலரும் கோடிக்கணக்கில் பணத்தை முதலீடு செய்துள்ளனர்.

இந்நிலையில், இந்த நிறுவனத்தை 2024 ஆம் ஆண்டு இறுதியில் மூடிவிட்டு பிரபுமணி திடீரென தலைமறைவானார்.

இவரிடம் முதலீடு செய்து ஏமாற்றம் அடைந்தவர்கள் சென்னை அசோக் நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையில் புகார் அளித்தனர்.

மொத்தம் 20 கோடி ரூபாய் வரை இழந்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் புகாரில் தெரிவித்தனர்.

இதையடுத்து முதல் கட்டமாக பிரபு மணி மீது காவல் துறை வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட்டார். பெண் காவல் ஆய்வாளர் ஷீலா மேரியும் மோசடிக்கு உடந்தையாக இருந்தது உறுதி செய்யப்பட்டதால், அவர் மீதும் பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதன் காரணமாக அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இந்நிலையில், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவல் துறை ஆய்வாளர் ஷீலா மேரி, முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி குமரப்பன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நகை முதலீடு திட்டத்தில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால், காவல்துறை ஆய்வாளர் ஷீலா மேரிக்கு முன்ஜாமீன் வழங்க கூடாது என கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து, மனுவை விசாரித்த நீதிபதி, ஆய்வாளரின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Hindusthan Samachar / ANANDHAN