பொன்ராஜ் வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு
சென்னை, 29 ஜூன் (ஹி.ச.) தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பேசிய பெண் தொண்டர்களை இழிவாக விமர்சித்ததாக, அரசியல் விமர்சகரும், மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகருமான பொன்ராஜ்-க்கு எதிராக,
Ponraj


சென்னை, 29 ஜூன் (ஹி.ச.)

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பேசிய பெண் தொண்டர்களை இழிவாக விமர்சித்ததாக, அரசியல் விமர்சகரும், மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகருமான

பொன்ராஜ்-க்கு எதிராக, கடந்த மார்ச் 26 ஆம் தேதி தற்போதைய அமைச்சர்கள் நிர்மல் குமார், ராஜ்குமார் ஆகியோர் சென்னை காவல் துறையிடம் புகார் அளித்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில், மே 12 ஆம் தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறை மற்றும் கடலூர் மாவட்ட காவல் துறையும் பொன்ராஜ் மீது தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்தன.

இதனை அடுத்து தன் மீது பதிவு செய்யப்பட்ட இந்த இரு வழக்குகளையும் ரத்து செய்யக் கோரி பொன்ராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இதனை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அரசியல் விமர்சகர் பொன்ராஜ் மனுக்களுக்கு பதிலளிக்கும் படியும், இந்த வழக்குகள் தொடர்பாக இறுதி அறிக்கை தாக்கல் செய்யக் கூடாது என காவல் துறைக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த நிலையில், அரசியல் விமர்சகர் பொன்ராஜ் தாக்கல் செய்த இந்த மனுக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. இந்த மனுக்கள் மீது நீதிபதி ஜி.கே. இளந்திரையன் விசாரணை நடத்தினார்.

அப்போது காவல் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பொன்ராஜ் சட்டமன்ற உறுப்பினராக இல்லை. ஆனால் இந்த வழக்கு சிறப்பு வழக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனால், பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இதை ஏற்ற நீதிபதி ஜி.கே. இளந்திரையன், இரு மனுக்கள் மீதும் பதில் அளிக்க காவல் துறைக்கு ஜூலை 6 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கி, விசாரணையை தள்ளி வைத்தார்.

மேலும், பொன்ராஜுக்கு எதிரான வழக்குகளில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யக் கூடாது என்ற இடைக்கால தடை உத்தரவு அதுவரை நீடிக்கப்படுவதாகவும் நீதிபதி இளங்திரையன் தெரிவித்தார்

Hindusthan Samachar / ANANDHAN