தடையை மீறி மாநிலம் முழுவதும் திமுகவினர் ஆர்ப்பாட்டம் -100க்கும் மேற்பட்டோர் கைது
சென்னை, 29 ஜூன் (ஹி.ச.) கடந்த சில தினங்களுக்கு முன்பு பொது இடத்தில் போதைப்பொருள் பயன்படுத்துவது போன்ற காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியானதைத் தொடர்ந்து தவெக அரசின் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் சரத்குமாரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என வலி
DMK members stage protests


சென்னை, 29 ஜூன் (ஹி.ச.)

கடந்த சில தினங்களுக்கு முன்பு பொது இடத்தில் போதைப்பொருள் பயன்படுத்துவது போன்ற காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியானதைத் தொடர்ந்து தவெக அரசின் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் சரத்குமாரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தி திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டத்தை அறிவித்திருந்தது.

ஆனால், போராட்டத்திற்கு 5 நாட்களுக்கு முன்னதாக முறையான அனுமதி கோரப்படவில்லை எனக் கூறி காவல்துறை அனுமதி மறுத்தது.

இதனையடுத்து தடையை மீறி திரண்ட திமுகவினர் மற்றும் மாணவர் அணியினர் மாநிலம் தழுவிய அளவில் ஆர்ப்பாட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.

சென்னை, மதுரை, தர்மபுரி, கடலூர், தேனி, சேலம், ஈரோடு உள்ளிட்ட மாவட்ட தலைநகரங்களில் ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.

சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் மா. சுப்பிரமணியன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

தடையை மீறி போராட்டம் நடத்தியதாக அவர்கள் உட்பட நூற்றுக்கணக்கான திமுகவினரை காவல்துறையினர் கைது செய்து தனியார் மண்டபங்களில் தங்க வைத்தனர்.

அமைச்சர் சரத்குமார் உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும், பொறுப்பான பதவியில் இருப்பவர்கள் முன்மாதிரியாக நடந்துகொள்ள வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் முழக்கமிட்டனர்.

வீடியோ வெளியான பின்னரும் அரசு தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என திமுக தரப்பு குற்றம்சாட்டியுள்ளது.

அதேநேரம், சட்டம்-ஒழுங்கை கருத்தில் கொண்டும், உரிய முன்னறிவிப்பு இல்லாததாலும் அனுமதி மறுக்கப்பட்டதாக காவல்துறை விளக்கமளித்துள்ளது.

கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / vidya.b