காரைக்கால் அம்மையார் ஆலயத்தில் மாங்கனி திருவிழா கோலாகல தொடக்கம்
காரைக்கால், 29 ஜூன் (ஹி.ச.) புதுச்சேரியில் சைவ சமயத்தின் 63 நாயன்மார்களில் ஒருவரான புனிதவதி எனும் காரைக்கால் அம்மையாரின் அவதாரத் தலமான காரைக்கால் அம்மையார் கோவிலில், ஆண்டுதோறும் நடைபெறும் புகழ்பெற்ற மாங்கனி திருவிழா இந்த ஆண்டு ஆனி மாத பௌர்ணமி
Grand commencement of the Maangani Festival


காரைக்கால், 29 ஜூன் (ஹி.ச.)

புதுச்சேரியில் சைவ சமயத்தின் 63 நாயன்மார்களில் ஒருவரான புனிதவதி எனும் காரைக்கால் அம்மையாரின் அவதாரத் தலமான காரைக்கால் அம்மையார் கோவிலில், ஆண்டுதோறும் நடைபெறும் புகழ்பெற்ற மாங்கனி திருவிழா இந்த ஆண்டு ஆனி மாத பௌர்ணமியை முன்னிட்டு இன்று கோலாகலமாகத் தொடங்கியது.

இன்று அதிகாலை 3:00 மணிக்கு பஞ்சமூர்த்திகளுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. காலை 9:00 மணி முதல் விழாவின் மிக முக்கியச் சிகர நிகழ்வான ஸ்ரீ பிச்சாண்டமூர்த்தி வீதியுலா மற்றும் மாங்கனி இறைத்தல் வைபவம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

விழாவின் முக்கிய நிகழ்வாக, சிவபெருமான் பிச்சாண்டவர் திருக்கோலத்தில் பவளக்கால் விமானத்தில் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்தார்.

பிச்சாண்டவர் திருக்கோலம் என்பது, காரைக்கால் அம்மையார் தனது கணவருக்கு சிவபெருமான் கேட்டு அருளிய மாங்கனியை வழங்கிய புராண நிகழ்வை நினைவுகூரும் வகையில் அமைந்ததாகும்.

வீதி உலா நடைபெற்றபோது, வீடுகளின் மாடங்களிலும், வீதிகளின் இருமருங்கிலும் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், பிச்சாண்டவர் மீது மாங்கனிகளை இறைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

பக்தர்கள் இறைத்த மாங்கனிகளை பிரசாதமாக கருதி மற்றவர்கள் போட்டிபோட்டு எடுத்துச் சென்றனர். இந்த மாங்கனிகளை உண்டால் குழந்தைப்பேறு கிடைக்கும், நோய்கள் தீரும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

விழாவையொட்டி காரைக்கால் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு பயபக்தியுடன் வழிபட்டனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கோவில் நிர்வாகத்தினர், பல நூற்றாண்டுகளாக தொன்றுதொட்டு நடைபெறும் இந்தத் திருவிழா பக்தர்களின் நம்பிக்கையையும், பாரம்பரியத்தையும் பறைசாற்றுவதாக தெரிவித்தனர்.

இன்று மாலை 7:30 மணிக்கு அம்மையார் கோயிலில் அமுது படையல் நிகழ்வு நடைபெறும்.

நாளை அதிகாலை 5:00 மணிக்கு காரைக்கால் அம்மையாருக்கு இறைவன் ஜோதி வடிவில் காட்சி கொடுத்து ஆட்கொள்ளும் கைலாயப் பயண வைபவத்துடன் விழா நிறைவடைகிறது.

திருவிழாவை முன்னிட்டு போலீஸார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Hindusthan Samachar / vidya.b