Enter your Email Address to subscribe to our newsletters

திருச்சி, 29 ஜூன் (ஹி.ச)
திருச்சி விமான நிலையத்திற்கு பல்வேறு நாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக துபாய், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து அதிக அளவில் விமானங்கள் இயக்கப்படுகின்றன. மேலும் மலேசியாவில் இருந்து தாய்லாந்துக்கு இணைப்பு விமானங்கள் மூலம் விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மலேசியாவில் இருந்து வந்த ஏர் ஏசியா விமான பயணிகளின் உடைமைகளை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஒரு பயணியின் உடைமையில் ரூ.6 கோடி மதிப்பிலான 6 கிலோ ஹைட்ரோபோனிக் என்ற போதைப்பொருள் இருந்தது.
இது குறித்து அந்த பயணியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இதில் அவர், சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த முகமது அலி (வயது 36) என்பதும், தாய்லாந்தில் இருந்து மலேசியா வழியாக திருச்சிக்கு விமானத்தில் வந்ததும், அவர் தனது உடைமையில் மறைத்து போதைப்பொருளை கடத்தி வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள், போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். மேலும் முகமது அலியை விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த சம்பவத்தால் விமான நிலைய பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கைது செய்யப்பட்ட நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த கடத்தல் நெட்வொர்க்கில் மேலும் பலர் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படுகிறது.
போதைப்பொருள் எங்கிருந்து பெறப்பட்டது, யாருக்காக கடத்தி வரப்பட்டது, தமிழகத்தில் இதன் விநியோக சங்கிலி எப்படி செயல்படுகிறது என்பது குறித்து அதிகாரிகள் துரித விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b