Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 29 ஜூன் (ஹி.ச.)
தமிழக அரசின் உயர்மட்ட நிர்வாக மற்றும் காவல் துறை செயல்பாடுகளை ஆய்வு செய்யும் வகையில், முதல்வர் விஜய் தலைமையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎப்எஸ் அதிகாரிகளின் இருநாள் மாநாடு இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் தொடங்குகிறது.
நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெறும் இந்த மாநாட்டின் முதல் நாளில், மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் துறையின் மூத்த அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்துகிறார்.
சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, பொது சுகாதாரம், போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள், பழங்குடியினர் மற்றும் பட்டியலின மக்களின் நலன், முதியோர் பாதுகாப்பு, சட்டவிரோத கனிம வளக் கொள்ளையை கட்டுப்படுத்துதல், மத வழிபாட்டு நிகழ்வுகளுக்கான பாதுகாப்பு மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நலன் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.
இதையடுத்து, மாவட்ட ஆட்சியர்களுடன் மட்டும் நடைபெறும் தனி ஆலோசனையில், அரசின் பல்வேறு துறைகளின் செயல்திட்டங்கள் மற்றும் முன்னேற்றப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.
மாநாட்டின் இரண்டாவது நாளான நாளை, வனத்துறை அதிகாரிகளுடன் நடைபெறும் ஆலோசனையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காலநிலை மாற்றம், பசுமை தமிழ்நாடு திட்டம், வனப்பகுதிகளில் உள்கட்டமைப்பு மேம்பாடு, வன உரிமைச் சட்ட அமலாக்கம் மற்றும் மனித-விலங்கு மோதல்களை குறைக்கும் நடவடிக்கைகள் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது.
இந்த இருநாள் மாநாட்டின் நிறைவில், நிர்வாகம் மற்றும் சட்டம்-ஒழுங்கு தொடர்பாக பல்வேறு முக்கிய அறிவுறுத்தல்களை முதல்வர் வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P