Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 29 ஜூன் (ஹி.ச.)
ஜூலை 2 வது வாரத்தில் முதலமைச்சர் விஜய் கரூர் செல்ல இருப்பதாகவும், கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி கரூரில் நடைபெற்ற தவெக பரப்புரையில் திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர்.
இந்த பெருந்துயரம் தமிழ்நாடு மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தவெக தலைவர் விஜய், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்கவில்லை என அப்போது பெரிய அளவில் விமர்சனம் செய்யப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை, சென்னைக்கு அழைத்து வந்து ஆறுதல் கூறினார் விஜய்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தைத் தொடர்ந்து, உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அரசியல் நிகழ்ச்சிகள் மற்றும் பொதுக்கூட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று, இதர கட்சிகளின் ஆதரவுடன் விஜய் தமிழ்நாடு முதலமைச்சராக மே 10-ந் தேதி பதவியேற்றார்.
விஜய் தலைமையிலான அரசு பதவியேற்று 50 நாட்கள் நிறைவடைந்துள்ளன.
இந்த நிலையில், முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் முதன்முறையாக விஜய், கரூர் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜூலை 2 வது வாரத்தில் அவர் கரூர் செல்ல உள்ளதாகவும், அங்கு கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும், பல்வேறு அரசு நிகழ்ச்சிகளிலும் முதலமைச்சர் விஜய் பங்கேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. மாநிலம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டமாக சுற்றுப்பயணம் மேற்கொள்ள முதலமைச்சர் விஜய் திட்டமிட்டுள்ளதாகவும், அதன் தொடக்கமாக முதலில் கரூர் செல்ல இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில், முதலமைச்சர் விஜய் கரூர் பயணம் மேற்கொள்ள இருப்பதாக வெளியான தகவல் அரசியல்ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / ANANDHAN