விவசாயக் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நூதன ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர், 29 ஜூன் (ஹி.ச.) தேர்தலின் போது அளித்த வாக்குறுதிப்படி, தவெக அரசு விவசாயக் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, கும்பகோணத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த விவசாயிகள் நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கும்பகோணம் த
Protest


தஞ்சாவூர், 29 ஜூன் (ஹி.ச.)

தேர்தலின் போது அளித்த வாக்குறுதிப்படி, தவெக அரசு விவசாயக் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, கும்பகோணத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த விவசாயிகள் நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கும்பகோணம் தலைமை அஞ்சலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் மு.அ.பாரதி தலைமை தாங்கினார்.

இதில், விவசாயிகளும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்களும் கையில் செங்கொடி ஏந்தி, விவசாயக் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற விவசாயிகளான ராமலிங்கம், சுந்தரி ஆகிய இருவரும், தமிழக அரசு வேளாண் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யவில்லை என்றால், தமிழக விவசாயிகள் உயிரை மாய்த்துக் கொள்வதை தவிர வேறு வழியில்லை என்று தெரிவிக்கும் விதமாக, தங்களது கழுத்தில் தூக்கு கயிற்றை மாட்டிக் கொண்டு நூதன முறையில் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தில், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும். பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி உள்ளிட்ட அனைத்து வரி இனங்களையும் மத்திய அரசு குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

மேலும், சமையல் எரிவாயு மானியத்தை முழுமையாக வழங்கிட வேண்டும் என்றும், தொடர்ந்து அதிகரித்து வரும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

தொழிலாளர்களுக்கு எதிரான 4 சட்ட தொகுப்புகளை திரும்ப பெற வேண்டும் என்றும், மாநிலங்களுக்கு 40 சதவீத நிதிசுமையை ஏற்படுத்தும் விபி-ஜி ராம்ஜி திட்டத்தை ரத்து செய்து விட்டு, முந்ததைய மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி அளிப்பு திட்டத்தையே தொடர்ந்து விரிவுபடுத்தி அமல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

ஒப்பந்தம் மற்றும் அவுட் சோர்சிங் முறையில் பணியாற்றுபவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று வலிறுத்தியும், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக இந்த நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Hindusthan Samachar / ANANDHAN