அமைச்சர் சரத்குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் - காவல் ஆணையரிடம் வழக்கறிஞர் புகார்
சென்னை, 29 ஜூன் (ஹி.ச.) தமிழக அரசின் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் சரத்குமார் மீது போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி, வழக்கறிஞர் சரண்யா சென்னை காவல் ஆணையரிடம் புகார் மனு
அமைச்சர் சரத்குமார்  மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் -  காவல் ஆணையரிடம் வழக்கறிஞர் புகார்


சென்னை, 29 ஜூன் (ஹி.ச.)

தமிழக அரசின் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் சரத்குமார் மீது போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி, வழக்கறிஞர் சரண்யா சென்னை காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

சமீபத்தில் சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வரும் ஒரு வீடியோவில், சென்னை சேப்பாக்கம் பகுதியில் அமைச்சர் சரத் போதைப்பொருள் பயன்படுத்தியதாகக் கூறப்படும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக சரண்யா தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

புகார் மனுவில், சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள வீடியோவை தொழில்நுட்ப ரீதியாக ஆய்வு செய்து, அதில் இடம்பெற்றுள்ள நபர் அமைச்சர் சரத்தா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், வீடியோ எப்போது, எந்த சூழ்நிலையில் பதிவு செய்யப்பட்டது என்பது குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வீடியோவில் இடம்பெற்றுள்ள காட்சிகள் உண்மையானவை என நிரூபிக்கப்பட்டால், போதைப்பொருள் தடுப்பு தொடர்பான சட்டங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதால், பதவி அல்லது அதிகாரத்தைப் பொருட்படுத்தாமல் முழுமையான மற்றும் வெளிப்படையான விசாரணை நடைபெற வேண்டும் என்றும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுமக்கள் மத்தியில் குழப்பம் மற்றும் சந்தேகங்கள் நிலவி வரும் சூழலில், இந்த விவகாரம் குறித்து காவல்துறை தெளிவான விளக்கத்தை அளிக்க வேண்டும் என்றும், உண்மை நிலையை வெளிக்கொணர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சரண்யா கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தப் புகார் தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகம் மனுவை பெற்றுக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

புகார் மீது காவல்துறை மேற்கொள்ளும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அரசியல் வட்டாரங்களிலும், சமூக வலைதளங்களிலும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

Hindusthan Samachar / vidya.b