Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 29 ஜூன் (ஹி.ச.)
தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத் துறையின் சார்பில் மாநிலம் முழுவதும் கொண்டாடப்படவுள்ள கூட்டுறவு வாரம்-2026 நிகழ்ச்சியை கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜ், சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலக வளாகத்தில் கூட்டுறவு கொடி ஏற்றி திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.
இந்திய அரசின் கூட்டுறவு அமைச்சகம் தொடங்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, ஜூன் 29 முதல் ஜூலை 6 வரை தமிழகம் முழுவதும் எட்டு நாட்கள் கூட்டுறவு வாரம்-2026 கொண்டாடப்பட உள்ளது.
பொதுமக்களிடையே கூட்டுறவு இயக்கத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதுடன், நவீன டிஜிட்டல் தொழில்நுட்பங்களை கூட்டுறவுச் சங்கங்களில் அறிமுகப்படுத்தி அதன் பயன்பாட்டை விரிவுபடுத்தும் நோக்கிலும் இந்த நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன.
மாநிலம் முழுவதும் செயல்பட்டு வரும் கூட்டுறவு நிறுவனங்கள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் (PACS) இந்த வார நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வகையில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கூட்டுறவு வாரத்தை முன்னிட்டு PACS கணினிமயமாக்கல் குறித்த விளக்க நிகழ்ச்சிகள், வாடிக்கையாளர்களுக்கான டிஜிட்டல் வங்கிச் சேவைகள் விழிப்புணர்வு முகாம்கள், மரக்கன்றுகள் நடுதல், மாணவர்களுக்கான போட்டிகள், கூட்டுறவுச் சாதனைக் கண்காட்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் மாநிலம் முழுவதும் நாள்தோறும் நடத்தப்பட உள்ளன.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் காந்திராஜ், கூட்டுறவு அமைச்சகம் தொடங்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி கூட்டுறவு வார விழா கொண்டாடப்படுவதாக தெரிவித்தார்.
இன்று தொடங்கப்பட்டுள்ள இந்த விழா, தமிழகம் முழுவதும் சிறப்பாக நடைபெற உள்ளதாகவும் அவர் கூறினார்.
Hindusthan Samachar / P YUVARAJ