அரக்கோணத்தில் புதிய டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு - பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்
அரக்கோணம், 29 ஜூன் (ஹி.ச.) அரக்கோணம் அருகே வட மாம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள செந்தில் நகரில் புதிதாக டாஸ்மாக் மதுபானக் கடை திறக்கப்பட உள்ளதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். குடிய
அரக்கோணத்தில் புதிய டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு - பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்


அரக்கோணம், 29 ஜூன் (ஹி.ச.)

அரக்கோணம் அருகே வட மாம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள செந்தில் நகரில் புதிதாக டாஸ்மாக் மதுபானக் கடை திறக்கப்பட உள்ளதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குடியிருப்புகள் அடர்த்தியாக உள்ள செந்தில் நகரில், தனியார் பள்ளி ஒன்றின் அருகிலேயே புதிய டாஸ்மாக் கடை அமைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனால் அதிருப்தி அடைந்த அப்பகுதி மக்கள், குறிப்பாக பெண்கள் மற்றும் பெற்றோர்கள் பெருமளவில் திரண்டு போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

பள்ளி செல்லும் மாணவ-மாணவிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் என்றும், குடியிருப்பு பகுதியில் மதுக்கடை அமைந்தால் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு ஏற்படும் என்றும், பெண்கள் மற்றும் குழந்தைகள் அச்சமின்றி நடமாட முடியாத சூழல் உருவாகும் என்றும் போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டினர்.

முக்கிய சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

மக்களின் எதிர்ப்பையும் மீறி டாஸ்மாக் கடை திறக்கப்பட்டால், அடுத்தகட்டமாக தொடர் போராட்டங்களை முன்னெடுக்க உள்ளதாக பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மாவட்ட நிர்வாகம் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, மதுக்கடை அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b