உதவிப் பேராசிரியர் தேர்வில் முறைகேடு? – விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்
சென்னை, 29 ஜூன் (ஹி.ச.) தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான உதவிப் பேராசிரியர் பணியிடத் தேர்வில் புதிய சர்ச்சைகள் எழுந்துள்ளதாகவும், தேர்வு முறைகேடு குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக தமிழக அரசு உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட வேண்டும
அன்புமணி


சென்னை, 29 ஜூன் (ஹி.ச.)

தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான உதவிப் பேராசிரியர் பணியிடத் தேர்வில் புதிய சர்ச்சைகள் எழுந்துள்ளதாகவும், தேர்வு முறைகேடு குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக தமிழக அரசு உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

2,708 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்ட போட்டித் தேர்வின் விடைத்தாள்கள் மதிப்பீட்டில் குளறுபடிகள் மற்றும் முறைகேடுகள் நடந்ததாக ஏற்கனவே குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், தற்போது சில தேர்வர்களின் மதிப்பெண்களுக்கு அருகில் நீலம் மற்றும் மஞ்சள் நிற அடையாளங்கள் இடம்பெற்றிருப்பது புதிய சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

குறிப்பாக, ஆங்கிலப் பாட உதவிப் பேராசிரியர் தேர்வின் மதிப்பெண் பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்த வண்ண அடையாளங்கள், மதிப்பெண்களில் மாற்றங்கள் செய்யப்பட்டதற்கான அடையாளங்களாக இருக்கலாம் என்ற சந்தேகத்தை தேர்வர்கள் எழுப்பியிருப்பதாகவும், இந்த ஐயங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், இந்தத் தேர்வில் முதல் தாளில் 111 மதிப்பெண்கள் பெற்ற ஒருவர் இரண்டாம் தாளில் பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்றிருப்பதும், மற்றொருவர் முதல் தாளில் 54 மதிப்பெண்கள் பெற்ற நிலையில் இரண்டாம் தாளில் 49 மதிப்பெண்கள் பெற்று அதிக சதவீதம் பெற்றிருப்பதும் இயல்புக்கு மாறானதாக இருப்பதாக அன்புமணி சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து போட்டித் தேர்வுகள் தொடர்பாக சர்ச்சைகள் எழுவது ஆசிரியர் தேர்வு வாரியத்தின் நம்பகத்தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், 2017-ஆம் ஆண்டு அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் நியமன முறைகேடு தொடர்பான விசாரணை இன்னும் நடைபெற்று வருவதை நினைவுபடுத்திய அவர், தற்போதைய குற்றச்சாட்டுகளுக்கும் முழுமையான விசாரணை நடத்தி, முறைகேடுகள் உறுதியானால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தினார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P