Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 29 ஜூன் (ஹி.ச.)
தமிழ்நாடு பிரைவேட் ஸ்கூல்ஸ் அசோசியேஷன் என்ற பெயரில் செயல்பட்டு வந்ததாகக் கூறப்படும் பதிவு செய்யப்படாத அமைப்பின் தலைவர் பி.டி. அரசகுமார் என்கிற புதுக்கோட்டை தியாகராஜன் அரசகுமார் மற்றும் சிலர் மீது மோசடி மற்றும் சட்டவிரோதமாக பணம் வசூலித்ததாகக் கூறப்படும் புகார்களின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த வழக்கு தொடர்பாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பல்வேறு முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் பல மாவட்டங்களைச் சேர்ந்த தனியார் பள்ளி நிர்வாகிகளிடமிருந்து பெறப்பட்ட ஆவணங்கள், வங்கி பரிவர்த்தனை பதிவுகள் மற்றும் சாட்சியங்களின் அடிப்படையில், பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிகளிடமிருந்து கணிசமான அளவில் பணம் வசூலிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த வசூல்கள் எந்த நோக்கத்திற்காக மேற்கொள்ளப்பட்டன, எவ்வளவு தொகை பெறப்பட்டது, இதில் தொடர்புடையவர்கள் யார் என்பது உள்ளிட்ட விவரங்கள் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட பள்ளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் முழுமையான விவரங்கள் தொடர்ந்து சேகரிக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இவ்வழக்கில் அரசகுமார் உள்ளிட்டோருடன் தொடர்புடைய மற்ற நபர்களின் பங்கும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய கூடுதல் சாட்சியங்கள், ஆவணங்கள் மற்றும் நிதி பரிவர்த்தனை ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதுடன், இதில் தொடர்புடைய ஏனைய குற்றவாளிகளை அடையாளம் காணும் நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதற்கிடையில், இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டதாக கருதும் தனியார் பள்ளி நிர்வாகத்தினர் தங்களிடம் உள்ள ஆவணங்கள், ரசீதுகள், வங்கி பரிவர்த்தனை விவரங்கள் மற்றும் பிற ஆதாரங்களுடன் சென்னை பெருநகர காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவை அணுகி புகார் அளிக்குமாறு காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் விசாரணை மேலும் விரிவுபடுத்தப்படும் என்றும், சட்டவிரோதமாக பணம் வசூலித்தது தொடர்பாக உறுதியான ஆதாரங்கள் கிடைத்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Hindusthan Samachar / P YUVARAJ