அரசு வேலை வாங்கித் தருவதாக 23 லட்சம் மோசடி - முன்னாள் அமைச்சர் சிவசங்கர் பெயர் FIR-ல் இடம் பெற்றுள்ளதால் பரபரப்பு
சென்னை, 29 ஜூன் (ஹி.ச) அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.23 லட்சம் மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட இளஞ்செழியன் தொடர்பான முதல் தகவல் அறிக்கையில் (எப்.ஐ.ஆர்.), முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் பெயர் இடம்பெற்றிருப்பது அரசியல் வட்டாரத்தில
Siva


சென்னை, 29 ஜூன் (ஹி.ச)

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.23 லட்சம் மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட இளஞ்செழியன் தொடர்பான முதல் தகவல் அறிக்கையில் (எப்.ஐ.ஆர்.), முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் பெயர் இடம்பெற்றிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த 24ஆம் தேதி இளஞ்செழியனை கைது செய்தனர். ஓய்வு பெற்ற காவல்துறை சார்பு உதவி ஆய்வாளர் சீனிவாசன் அளித்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில், தலைமைச் செயலகத்தில் அமைச்சரை நேரில் சந்தித்ததாகவும், வழங்கிய பணம் வந்து சேர்ந்துவிட்டதாகக் கூறி அரசு வேலை வாங்கித் தருவதாக நம்பிக்கை அளித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் பலமுறை செல்போன் மூலம் தொடர்புகொண்டு நம்பிக்கை ஏற்படுத்தியதாகவும் புகார்தாரர் தெரிவித்துள்ளதாக எப்.ஐ.ஆர்.-ல் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், முன்னாள் முதலமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சபரீசன் ஆகியோருடன் தனது தாய்க்கு நெருக்கமான தொடர்பு இருப்பதாகவும், முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் தனது தாயின் ஆசிரியர் என்றும் கூறி இளஞ்செழியன் பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதற்கிடையில், கைது செய்யப்பட்ட இளஞ்செழியன் தனது உதவியாளர் அல்ல என்று முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் ஏற்கனவே சமூக வலைதளத்தில் விளக்கம் அளித்திருந்தார்.

இருப்பினும், முதல் தகவல் அறிக்கையில் அவரது பெயர் இடம்பெற்றிருப்பது இந்த வழக்கில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படும் வரை அவை குற்றச்சாட்டுகளாகவே கருதப்படுகின்றன.

Hindusthan Samachar / P YUVARAJ