TNPDCL உதவி மின் பொறியாளர் நியமனத்தில் பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு சிறப்பு வயது தளர்வு வழங்க வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்
தமிழ்நாடு, 29 ஜூன் (ஹி.ச) மின்பகிர்மானக் கழக (TNPDCL) உதவி மின் பொறியாளர் பணியிட நியமனத்தில் ஏற்பட்ட நிர்வாகத் தாமதம் மற்றும் வயது வரம்பு காரணமாக தகுதியான இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, தமிழக அரசு உடனடியாக தலையிட்டு சிறப்பு வயது வரம்புத் த
அண்ணாமலை


தமிழ்நாடு, 29 ஜூன் (ஹி.ச)

மின்பகிர்மானக் கழக (TNPDCL) உதவி மின் பொறியாளர் பணியிட நியமனத்தில் ஏற்பட்ட நிர்வாகத் தாமதம் மற்றும் வயது வரம்பு காரணமாக தகுதியான இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, தமிழக அரசு உடனடியாக தலையிட்டு சிறப்பு வயது வரம்புத் தளர்வு வழங்க வேண்டும் என 'வி த லீடர்ஸ்' இயக்கத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில்,

2020-ஆம் ஆண்டு நடைபெற இருந்த மின்பகிர்மானக் கழக உதவி மின் பொறியாளர் தேர்வு கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டு, பின்னர் 2022-ஆம் ஆண்டு நிர்வாகக் காரணங்களால் முழுமையாக ரத்து செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் TNPSC மூலம் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டாலும், நீண்ட காலமாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 2024-ஆம் ஆண்டு பொதுப்பணித்துறை உதவி மின் பொறியாளர் தேர்வு முடிவுகள் வெளியாகும் முன்பாக, மின்பகிர்மானக் கழகத்தின் 195 காலிப்பணியிடங்கள் அந்தத் தேர்வு மூலம் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டதால், 2020 முதல் அந்தப் பணிக்காக காத்திருந்த இளைஞர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

அரசின் நிர்வாகத் தாமதம் காரணமாக வயது வரம்பை கடந்த தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு போதிய வயது தளர்வு வழங்கப்படவில்லை என்றும், வயது வரம்பு தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தபோதும், தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்ற பலர் வயது வரம்பைக் காரணம் காட்டி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எனவே, தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் நடவடிக்கைகள் குறித்து வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் என்றும், நிர்வாகத் தாமதத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் ஒருமுறை சிறப்பு வயது வரம்புத் தளர்வு வழங்க வேண்டும் என்றும், தேர்வு நடைமுறை தொடங்கிய பிறகு விதிமுறைகள் அல்லது பணியிடங்களில் மாற்றம் செய்யும் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் தமிழக அரசை அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / GOKILA arumugam