Enter your Email Address to subscribe to our newsletters

திருச்சி, 29 ஜூன் (ஹி.ச.)
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே செயல்பட்டு வரும் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் (டிஎன்பிஎல்) ஆலையில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்கள், பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று காலை திடீர் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆலையில் நீண்ட காலமாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும், பணிப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஒரே நேரத்தில் பணிகளைப் புறக்கணித்தனர்.
இந்த திடீர் போராட்டத்தால் ஆலையின் உற்பத்திப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து பல ஆண்டுகளாக நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், எனவே வேறு வழியின்றி போராட்டத்தில் இறங்கியுள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
கோரிக்கைகள் குறித்து நிர்வாகம் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காண வேண்டும் எனவும், இல்லையெனில் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் எனவும் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து டிஎன்பிஎல் நிர்வாகம் தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
Hindusthan Samachar / vidya.b