தஞ்சாவூர் பெரியகோவிலில் பெருவுடையார் – பெரியநாயகி அம்மன் திருக்கல்யாண மகோத்ஸவம் கோலாகலம்
தஞ்சாவூர், 29 ஜூன் (ஹி.ச.) உலகப்புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரியகோவிலில் ஆனி மாதத்தை முன்னிட்டு அருள்மிகு பெரியநாயகி அம்மன் உடனுறை பெருவுடையார் திருக்கல்யாண மகோத்ஸவம் பக்தர்கள் திரளான பங்கேற்புடன் வெகு விமரிசையாக நடைபெற்றது. உலக பாரம்பரியச் சின்னமாக வ
திருக்கல்யாணம்


தஞ்சாவூர், 29 ஜூன் (ஹி.ச.)

உலகப்புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரியகோவிலில் ஆனி மாதத்தை முன்னிட்டு அருள்மிகு பெரியநாயகி அம்மன் உடனுறை பெருவுடையார் திருக்கல்யாண மகோத்ஸவம் பக்தர்கள் திரளான பங்கேற்புடன் வெகு விமரிசையாக நடைபெற்றது.

உலக பாரம்பரியச் சின்னமாக விளங்கும் தஞ்சாவூர் பெரியகோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் நடைபெறும் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

அதன்படி, இந்தாண்டுக்கான திருக்கல்யாண மகோத்ஸவம் ஞாயிற்றுக்கிழமை இரவு சிறப்பாக நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க யாக பூஜைகளை நடத்தினர்.

தொடர்ந்து பெரியநாயகி அம்மனுக்கும் பெருவுடையாருக்கும் மாலை மாற்றும் நிகழ்ச்சி, ஊஞ்சல் உற்சவம், பட்டு சேலை மற்றும் பட்டு வேட்டி அணிவிக்கும் வைபவம், மாங்கல்ய தாரணம் உள்ளிட்ட திருக்கல்யாண நிகழ்வுகள் விமரிசையாக நடைபெற்றன.

பின்னர் சிறப்பு மகா தீபாராதனை நடைபெற்றது.

முன்னதாக, பக்தர்கள் சீர்வரிசைப் பொருட்களை நால்வர் சன்னதியில் இருந்து ஊர்வலமாக எடுத்து வந்து சமர்ப்பித்தனர்.

இந்த திருக்கல்யாண மகோத்ஸவத்தில் பங்கேற்று தரிசனம் செய்தால் திருமணத் தடை நீங்குதல், சர்ப்ப தோஷ நிவர்த்தி, சந்தான பாக்கியம், நீண்ட ஆயுள், மாங்கல்ய தோஷ நிவர்த்தி உள்ளிட்ட பலன்கள் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

இந்த விழாவில் தஞ்சாவூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள், குறிப்பாக பெண்கள், கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam