உதவிப் பேராசிரியர் தேர்வில் முறைகேடு குற்றச்சாட்டிற்கு உரிய விசாரணை நடத்த வேண்டும் – விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தல்
சென்னை, 29 ஜூன் (ஹி.ச.) அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாக இருந்த 2,708 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) நடத்திய தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் கு
Thiruma


Un


சென்னை, 29 ஜூன் (ஹி.ச.)

அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாக இருந்த 2,708 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) நடத்திய தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று விசிக தலைவர்

தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கடந்த 2025 டிசம்பர் 27-ஆம் தேதி நடத்தப்பட்ட உதவிப் பேராசிரியர் தேர்வின் முடிவுகள் 2026 ஜூன் 25-ஆம் தேதி வெளியிடப்பட்டதாகவும், அந்த முடிவுகள் ஏராளமான தேர்வர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தேர்வு முடிவுகளில் பெரிய அளவில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், தேர்வு முடிவுகளை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வலுப்பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்வர்களின் மதிப்பெண் விவரங்களே முறைகேடுகளுக்கான சந்தேகத்தை வலுப்படுத்துவதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், தமிழ் பாடத்தின் முதல் தாளில் 150-க்கு 111 மதிப்பெண்கள் பெற்ற ஒருவர், இரண்டாம் தாளில் 50-க்கு பூஜ்ஜியம் மட்டுமே பெற்றிருப்பதாகவும், மற்றொருவர் முதல் தாளில் 54 மதிப்பெண்கள் பெற்ற நிலையில், இரண்டாம் தாளில் 49 மதிப்பெண்கள் பெற்றிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

முனைவர் பட்டம் உள்ளிட்ட உயர்கல்வித் தகுதிகளை பெற்றவர்கள் பூஜ்ஜிய மதிப்பெண் பெறும் அளவுக்கு தேர்வு எழுதியிருப்பார்கள் என்பது நம்பத்தகுந்ததாக இல்லை என்றும், தேர்வுத் தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்ட விதத்தில் முறைகேடுகள் நடந்திருக்கலாம் என்ற வலுவான சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், இது சாதாரண குளறுபடியாகத் தெரியவில்லை என்றும், திட்டமிட்டு செய்யப்பட்ட முறைகேடாகவே தோன்றுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

தேர்வு நியாயமாக நடைபெறும் என்ற நம்பிக்கையில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற நிலையில், அவர்களின் நம்பிக்கை சிதைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எனவே, தேர்வு முடிவுகள் தொடர்பாக தமிழ்நாடு அரசு உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும், விசாரணை முடியும் வரை உதவிப் பேராசிரியர் பணிநியமன நடைமுறைகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், பாதிக்கப்பட்ட தேர்வர்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ