Enter your Email Address to subscribe to our newsletters

திருப்பூர், 29 ஜூன் (ஹி.ச.)
திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே உள்ள குறிச்சிக்கோட்டையைச் சேர்ந்த விவசாயி சண்முகம், தனது தோட்டத்தில் பட்டியல் மாடுகள் மற்றும் ஆடுகளை வளர்த்து வருகிறார். கால்நடை வளர்ப்பையே தனது குடும்பத்தின் முக்கிய வாழ்வாதாரமாகக் கொண்டு பல ஆண்டுகளாக இந்தத் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், இரவு திடீரென 10-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் அவரது தோட்டத்திற்குள் புகுந்து, அங்கிருந்த ஆடுகள் மற்றும் கன்றுக்குட்டியை கடித்துக் குதறின.
இதில் 5 ஆடுகளும், ஒரு கன்றுக்குட்டியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன.
ஆடுகளின் அலறல் சத்தம் கேட்டு வீட்டிலிருந்து ஓடி வந்த சண்முகம், தெரு நாய்களை விரட்டியதால் மற்ற ஆடுகள் மற்றும் மாடுகள் உயிர்தப்பின.
விவசாயி சண்முகம் கூறுகையில்:
கடந்த பல ஆண்டுகளாக கால்நடை வளர்ப்பை நம்பித்தான் எங்கள் குடும்பம் வாழ்ந்து வருகிறது.
தற்போது தெரு நாய்கள் தாக்கியதில் 5 ஆடுகளும், ஒரு கன்றுக்குட்டியும் உயிரிழந்துள்ளன.
இதனால் சுமார் ரூ.1.5 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட கால்நடைத் துறையினர் நேரில் ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும். மேலும், இப்பகுதியில் அதிகரித்து வரும் தெரு நாய்களை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.
இந்த சம்பவம் குறிச்சிக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
தெரு நாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
Hindusthan Samachar / ANANDHAN