Enter your Email Address to subscribe to our newsletters

லண்டன் , 29 ஜூன் (ஹி.ச.)
10-வது மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் லீக் சுற்றின் கடைசி நாளான குரூப்-1 பிரிவில் இந்தியா–ஆஸ்திரேலியா அணிகள் லார்ட்ஸ் மைதானத்தில் மோதின.
அரையிறுதிக்கு முன்னேற இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய இந்திய அணி, கடைசி வரை போராடியும் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி தொடரில் இருந்து வெளியேறியது.
டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.
தொடக்க வீராங்கனைகள் ஸ்மிரிதி மந்தனா மற்றும் ஷபாலி வர்மா அதிரடியாக ஆடி அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர்.
மந்தனா 38 ரன்களும், ஷபாலி 34 ரன்களும் எடுத்தனர். பின்னர் ஜெமிமா ரோட்ரிக்ஸ் மற்றும் ஹர்மன்ப்ரீத் கவுர் இணைந்து பொறுப்புடன் விளையாடி ரன் குவித்தனர்.
குறிப்பாக கடைசி ஓவரில் ஹர்மன்ப்ரீத் தொடர்ந்து மூன்று சிக்சர்கள் பறக்கவிட்டு 25 பந்துகளில் அரைசதம் கடந்தார்.
அவர் 56 ரன்களும், ஜெமிமா 34 ரன்களும் எடுத்தனர். இதன் மூலம் இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் குவித்தது.
171 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் ஓவரிலேயே ஜார்ஜியா வோல் விக்கெட்டை இழந்தது. எனினும் லிட்ச்பீல்ட், பெத் மூனி ஆகியோர் ஓரளவு ரன் சேர்த்தனர். தொடர்ந்து களமிறங்கிய எலிஸ் பெர்ரி மற்றும் ஆஷ்லே கார்ட்னர் இந்திய பந்துவீச்சை திறம்பட சமாளித்து சதத்தை கடந்த பார்ட்னர்ஷிப் அமைத்து ஆட்டத்தின் போக்கையே மாற்றினர்.
எலிஸ் பெர்ரி 38 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆஷ்லே கார்ட்னர் 29 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 19 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த தோல்வியின் மூலம் இந்திய அணி அரையிறுதிக்கான வாய்ப்பை இழந்து மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது.
தென்னாப்பிரிக்க அணி அரையிறுதிக்கு முன்னேறியது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA