Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 03 ஜூன் (ஹி.ச)
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகையும், கார் மற்றும் பைக் பந்தய வீராங்கனையுமான அலிசா அப்துல்லா இன்று பரபரப்பான புகார் மனுவை அளித்தார். யூடியூபர் முக்தார் மற்றும் முன்னாள் பாஜக நிர்வாகி சூர்யா சிவா ஆகியோர் தன்னையும், தனது இரட்டை குழந்தைகளையும் குறித்து அவதூறாகவும் தரக்குறைவாகவும் பேசியுள்ளதாக அவர் குற்றம்சாட்டினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அலிசா அப்துல்லா,
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்கள் மற்றும் யூடியூப் நிகழ்ச்சிகளில் தன்னைப் பற்றியும், தனது குடும்பத்தினரைப் பற்றியும் தொடர்ந்து அவதூறான கருத்துகள் பரப்பப்படுவதாக தெரிவித்தார்.
குறிப்பாக தனது இரட்டை குழந்தைகள் குறித்து வெளியிடப்பட்ட கருத்துகள் தன்னை மனரீதியாக கடுமையாக பாதித்ததாகவும் கூறினார்.
இரட்டை குழந்தைகளைப் பெற்றெடுத்த தாயாக பல உடல்நல சவால்களை எதிர்கொண்டு வரும் நிலையில், இந்தக் கருத்துகளை பார்த்து மனவேதனையில் கண்ணீர் விட்டேன்.
எனக்கும் என் குடும்பத்திற்கும் உறுதியான ஆதரவு இருந்ததால் இந்த நிலையை எதிர்கொண்டோம். இல்லையெனில் இது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும்,” என்றார்.
பெண்களை குறிவைத்து தொடர்ந்து தரக்குறைவான விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதாக குற்றம்சாட்டிய அவர், இதுபோன்ற செயல்களுக்கு எதிராக அரசு மற்றும் காவல்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
சம்பந்தப்பட்ட காணொளிகளை அகற்றுவதோடு, அவதூறு வழக்குகள் உள்ளிட்ட அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன் என்றும் தெரிவித்தார்.
மேலும் நான் எனக்காக மட்டும் பேசவில்லை. தமிழ்நாட்டின் அனைத்து பெண்களுக்காகவும் பேசுகிறேன். குழந்தைகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களை அரசியல் அல்லது தனிப்பட்ட விமர்சனங்களில் இழுப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று கூறினார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குறித்து பேசிய அவர், அண்ணாமலை எனக்கு காட்பாதர் போன்றவர். அவரை மிகவும் மதிக்கிறேன். அவர் ஒருபோதும் இத்தகைய தரக்குறைவான அரசியலை ஆதரிக்க மாட்டார் என்றார்.
இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் உறுதியளிக்கப்பட்டதாகவும் அலிசா அப்துல்லா தெரிவித்தார்.
Hindusthan Samachar / P YUVARAJ