Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 03 ஜூன் (ஹி.ச.)
சென்னை
வியாசர்பாடி எஸ்.ஏ. காலனி 3-வது தெருவைச் சேர்ந்த சுந்தரி (68), கொரட்டூர் பகுதியில் வீட்டு வேலை செய்து வருகிறார்.
இன்று காலை காவாங்கரையில் உள்ள தனது மகன் பாலாஜியின் வீட்டில் இருந்து புறப்பட்ட அவர், அம்பேத்கர் கல்லூரி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, மூர்த்திங்கர் நகர் பகுதியில் வசிக்கும் தனது தம்பி செல்வத்தின் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிர்திசையில் வந்த மர்ம நபர் ஒருவர், சுந்தரியின் கழுத்தில் அணிந்திருந்த சுமார் 3 சவரன் தங்கச் செயினை திடீரென பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பியோட முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த சுந்தரி கூச்சலிட்டு உதவி கோரினார்.
அந்த நேரத்தில் அருகில் போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், பொதுமக்களின் உதவியுடன் செயின் பறிப்பு நபரை துரத்திச் சென்றனர். சிறிது தூரம் விரட்டிச் சென்ற போலீசார், அந்த நபரை மடக்கிப் பிடித்து அவரிடமிருந்து பறிக்கப்பட்ட தங்கச் செயினை மீட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த எம்.கே.பி. நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பிடிபட்ட நபரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த உபேஷ்குமார் (24) என்பது தெரியவந்தது. மேலும், கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஜார்கண்டில் இருந்து சென்னை வந்த அவர், எருக்கஞ்சேரி பகுதியில் ஒப்பந்த அடிப்படையில் கூலி தொழிலாளியாக பணியாற்றி வந்ததும், பணத் தேவைக்காக செயின் பறிப்பில் ஈடுபட்டதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து உபேஷ்குமார் மீது வழக்குப் பதிவு செய்துள்ள எம்.கே.பி. நகர் போலீசார், அவர் வேறு ஏதேனும் குற்றச் சம்பவங்களில் தொடர்புடையவரா என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மூதாட்டியிடம் பறிக்கப்பட்ட தங்கச் செயினை உடனடியாக மீட்டுக் கொடுத்ததுடன், குற்றவாளியை துரத்திப் பிடித்த போக்குவரத்து போலீசாரின் நடவடிக்கைக்கு அப்பகுதி பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / P YUVARAJ