Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 03 ஜூன் (ஹி.ச.)
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த துதிபட்டு கிராமத்தில் 70 ஆண்டுகள் பழமையான அரசு உதவி பெறும் பள்ளியின் வளாகத்திற்குள் அப்பள்ளியின் நிலத்தை ஆக்கிரமித்து முறைகேடாக தேவாலயக் கட்டுமானம் மேற்கொள்ளப்படுவதாகக் கூறி பொதுநல வழக்கு ஒன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், கல்வி நிறுவனங்களின் வளாகங்கள் முழுக்க முழுக்க கல்விச் செயல்பாடுகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்றும், அவற்றை மதம் சார்ந்த கட்டுமானங்களுக்கு பயன்படுத்துவது சட்டவிரோதமானது என்றும் கருத்து தெரிவித்தனர்.
மேலும், தற்போது நடைபெற்று வரும் அனைத்து கட்டுமானப் பணிகளையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்தனர்.
இது தொடர்பாக தமிழக அரசு, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆகியோர் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பள்ளி நிலம் எந்த அடிப்படையில் தேவாலயம் கட்ட அனுமதிக்கப்பட்டது, அதற்கு யார் அனுமதி அளித்தது, அரசு விதிமுறைகள் பின்பற்றப்பட்டனவா என்பது குறித்து விளக்கமளிக்கவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
கல்வி நிலையங்களில் மதச்சார்பற்ற தன்மை பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் இந்த வழக்கு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
வழக்கின் அடுத்த விசாரணை விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b