திருச்சி அரசு மருத்துவமனை செவிலியர் கல்லூரி மாணவி மரணம் – ஆய்வறிக்கை சுகாதாரத்துறையிடம் சமர்ப்பிப்பு
திருச்சி, 03 ஜூன் (ஹி.ச) திருச்சி கி.ஆ.பெ. விஸ்வநாதம் அரசு மருத்துவக் கல்லூரியுடன் இணைந்த மகாத்மா காந்தி நினைவு அரசு பொது மருத்துவமனையில் மூக்கடைப்பு மற்றும் மூச்சுத்திணறல் பாதிப்பு காரணமாக செவிலியர் கல்லூரி மாணவி கடந்த மாதம் அனுமதிக்கப்பட்டார
Death of Nursing Student at Trichy


திருச்சி, 03 ஜூன் (ஹி.ச)

திருச்சி கி.ஆ.பெ. விஸ்வநாதம் அரசு மருத்துவக் கல்லூரியுடன் இணைந்த மகாத்மா காந்தி நினைவு அரசு பொது மருத்துவமனையில் மூக்கடைப்பு மற்றும் மூச்சுத்திணறல் பாதிப்பு காரணமாக செவிலியர் கல்லூரி மாணவி கடந்த மாதம் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு மேற்கொள்ளப்பட்ட மூக்கு அறுவை சிகிச்சையின் போது அவர் எதிர்பாராத விதமாக உயிரிழந்தார். இச்சம்பவத்தில் அதிக அளவிலான மயக்க மருந்து கொடுக்கப்பட்டதே மாணவியின் உயிரிழப்புக்குக் காரணம் என சக மாணவிகளும், உறவினர்களும் குற்றம் சாட்டினர். மருத்துவர்களின் அலட்சியம் மற்றும் தவறான சிகிச்சையால் தான் இந்த மரணம் நிகழ்ந்தது என கூறி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இவ்விவகாரம் தொடர்பாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் பணியாற்றி வரும் உறைவிட மருத்துவர் என். பாஸ்கர் தலைமையில் 4 பேர் கொண்ட விசாரணை குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.

இந்த குழுவில் காது, மூக்கு, தொண்டை பேராசிரியர் பாரதி மோகன், மயக்கவியல் பேராசிரியர் சண்முகசுந்தரம், மருத்துவப் பேராசிரியர் ஜெயபிரகாஷ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்த குழுவினர் திருச்சிக்கு வருகை தந்து , மாணவியின் மரணம் குறித்து முழுமையான விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் கண்காணிப்பாளர் பாஸ்கர் தலைமையிலான மருத்துவ நிபுணர் குழு இந்த அறிக்கையை தயாரித்து தற்போது வழங்கியுள்ளது.

ஒவ்வாமை பிரச்சினைக்காக மாணவிக்கு வழங்கப்பட்ட மருந்தின் பக்கவிளைவு காரணமாகவே இந்த உயிரிழப்பு நிகழ்ந்திருக்கலாம் என அந்த அறிக்கையில் முக்கியமாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக, ஒவ்வாமையை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் 'டெக்சாமெதாஜோன்' என்ற ஸ்டீராய்டு மருந்தை செலுத்தியதைத் தொடர்ந்து மாணவியின் உடல்நிலை மோசமடைந்து மரணம் ஏற்பட்டிருக்கலாம் என ஆய்வுக்குழு கருதுகிறது.

மாணவியின் மரணத்திற்கான சரியான காரணத்தை கண்டறிய விரிவான விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும், விசாரணை முடிவுகளின் அடிப்படையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் தெரிவித்துள்ளது.

இச்சம்பவம் மருத்துவ கல்லூரி வளாகத்தில் பெரும் சோகத்தையும், மருந்து பாதுகாப்பு குறித்த கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

Hindusthan Samachar / vidya.b