Enter your Email Address to subscribe to our newsletters

தருமபுரி, 03 ஜூன் (ஹி.ச.)
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகள் கோரிக்கை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசு அண்மையில் வெளியிட்ட கூட்டுறவு பயிர் கடன் தள்ளுபடி அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் நெற்றியில் பட்டை நாமம் பூசி, கைகளில் திருவோடு ஏந்தியபடி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். அரசு அறிவித்துள்ள கடன் தள்ளுபடி திட்டம் விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளிப்பதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.
விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கூறுகையில், சட்டப்பேரவை தேர்தலின்போது கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற அனைத்து பயிர் கடன்களும் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று முதலமைச்சர் வாக்குறுதி அளித்ததாக தெரிவித்தனர்.
ஆனால் தற்போது அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
பயிர் கடன்களுக்கு 50 சதவீதம் மட்டுமே தள்ளுபடி வழங்கப்படும் என கூறப்பட்டிருப்பது விவசாயிகளை அதிருப்தியடையச் செய்துள்ளதாக தெரிவித்தனர்.
மேலும், முழுமையான கடன் தள்ளுபடியை எதிர்பார்த்திருந்த விவசாயிகளுக்கு இந்த அறிவிப்பு போதுமானதாக இல்லை என்றும், அரசின் நடவடிக்கை விவசாயிகளின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
கடன் சுமையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு முழுமையான நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தனர்.
இந்த அறிவிப்பு விவசாயிகளை அவமதிக்கும் வகையில் இருப்பதாகவும், அவர்களை பிச்சைக்காரர்களைப் போல நடத்துவதாகவும் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
தேர்தல் வாக்குறுதிகளை அரசு முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
ஆர்ப்பாட்டத்தின் போது தமிழக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.
விவசாயிகளின் கோரிக்கைகளை அரசு உடனடியாக பரிசீலித்து, கூட்டுறவு வங்கிகளில் நிலுவையில் உள்ள பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் சங்கத்தினர் வலியுறுத்தினர்.
இந்த போராட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த விவசாயிகள் மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு நிலைமையை கண்காணித்தனர்.
Hindusthan Samachar / ANANDHAN