தர்மபுரியில் ரயிலில் இருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவர் பலி
தர்மபுரி, 03 ஜூன் (ஹி.ச.) தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மொரப்பூர் அருகே எம்.பள்ளிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாதேஸ்வரன் - ஆனந்தி தம்பதியரின் மகன் முத்துலட்சு
ரயில் விபத்து


தர்மபுரி, 03 ஜூன் (ஹி.ச.)

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மொரப்பூர் அருகே எம்.பள்ளிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாதேஸ்வரன் - ஆனந்தி தம்பதியரின் மகன் முத்துலட்சுமணன் (19). இவர் ஏற்காட்டில் உள்ள தனியார் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில், கல்லூரியில் இருந்து சொந்த ஊருக்குச் செல்வதற்காக சேலத்தில் இருந்து ரயிலில் பயணம் செய்துள்ளார். அப்போது அரூர் அடுத்த தொட்டம்பட்டி ரயில் நிலையம் அருகே சென்றபோது, எதிர்பாராத விதமாக ரயிலில் இருந்து தவறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.

இந்த விபத்தில் முத்துலட்சுமணன் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மொரப்பூர் ரயில்வே போலீசார், மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து ரயில்வே காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மகன் உயிரிழந்த செய்தியை அறிந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையில் கதறி அழுதது காண்போரை கண்கலங்கச் செய்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P