முதலமைச்சர் விஜய் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும் - ஈ.ஆர்.ஈஸ்வரன் வலியுறுத்தல்
சென்னை, 03 ஜூன் (ஹி.ச.) திருச்சியில் நடைபெற்ற நன்றி அறிவிப்பு கூட்டத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆற்றிய உரை குறித்து, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான E. R. ஈஸ்வரன் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து
ஈஸ்வரன்


சென்னை, 03 ஜூன் (ஹி.ச.)

திருச்சியில் நடைபெற்ற நன்றி அறிவிப்பு கூட்டத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆற்றிய உரை குறித்து, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான E. R. ஈஸ்வரன் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

முதலமைச்சரின் முதல் பொதுக்கூட்ட உரையை உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் கவனித்ததாகவும், ஆனால் அந்த உரை ஏமாற்றத்தை அளித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தமிழகத்தில் நிர்வாக சீர்கேடு ஏற்படாத வகையில் முதலமைச்சர் நிர்வாகத்தில் முழு கவனம் செலுத்த வேண்டும் என்றும், தாமதமின்றி அமைச்சரவை கூட்டத்தை கூட்டி முக்கிய கொள்கை முடிவுகள் குறித்து ஆலோசனை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

சட்டம்-ஒழுங்கு, மின்வெட்டு பிரச்சினை, விவசாயிகள் நலன், டெண்டர் முறைகளில் வெளிப்படைத்தன்மை, வீட்டு வரைபட அனுமதி, மணல் மற்றும் கல் குவாரி நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் அரசு கவனத்துடன் செயல்பட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

விவசாயக் கடன் தள்ளுபடி தொடர்பாக அவசர முடிவுகளை எடுக்காமல், விவசாயிகளின் எதிர்பார்ப்புகளை முழுமையாக பூர்த்தி செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேபோல், டாஸ்மாக் கடைகள் மூடப்படும் சூழலில் வேலை இழக்கும் ஊழியர்களுக்கு மாற்று வேலைவாய்ப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்றும், அவர்களின் நீண்டகால கோரிக்கைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் அரசு பேருந்துகளுடன் தனியார் பேருந்துகளிலும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனக் கூறியுள்ள அவர், அதற்கான கட்டணத்தை அரசே தனியார் பேருந்து நிறுவனங்களுக்கு வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இறுதியாக, பொதுமக்களின் வாழ்வாதார பிரச்சினைகள் மற்றும் நிர்வாக சவால்களில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என முதலமைச்சருக்கு ஈ.ஆர்.ஈஸ்வரன் ஆலோசனை வழங்கியுள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P