Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 03 ஜூன் (ஹி.ச.)
கடந்த மே 30 ஆம் தேதி இரவு சென்னை கோயம்பேட்டில் அமைந்து இருக்கக் கூடிய தனியார் மதுபான பாரில் நடனமாடும் போது இரு தரப்பினரிடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, பாரில் இருந்து இரு தரப்பினரையும் பவுன்சர்கள் வெளியேற்றினர்.
இந்த நிலையில் இரண்டு இளம் பெண்களும் இருசக்கர வாகனத்தில் கோயம்பேட்டில் இருந்து திருமங்கலம் நோக்கி சென்ற போது, பின்னால் வந்த மற்றொரு தரப்பு திமுக கொடி கட்டிய காரில் அவர்களை கொடூரமாக இடித்துவிட்டு அதி வேகமாக சென்றது. அதில் சம்பவ இடத்திலேயே யான்சி என்ற 18 வயது இளம்பெண் உயிரிழந்தார்.
விபத்து குறித்து தகவலறிந்து வந்த கோயம்பேடு காவல்துறையினர், யான்சியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்குப்பதிவுச் செய்த காவல்துறையினர், விபத்தை ஏற்படுத்தியது யார் என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த மற்றொரு 17 வயது இளம் பெண், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தற்போது அந்த இளம்பெண்ணும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார்.
இந்த சம்பவம் குறித்து அன்றைய தினமே ஒருவரைப் பிடித்து கோயம்பேடு காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது திமுக கொடி கட்டிய கார் சுமன் சக்திவேல் என்பவருடையது தெரிய வந்தது. இதையடுத்து, விபத்து நிகழ்ந்த இடத்தில் இருந்த சிசிடிவி கண்காணிப்புக் கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
தொடர் விசாரணையில் மதுபான விடுதியில் எதற்காக தகராறு நடைபெற்றது? எதற்காக காரை வேகமாக ஓட்டி இருசக்கர வாகனத்தின் மீது மோதி இளம்பெண்ணை கொலை செய்தனர்? FL3 பாரில் சிறுமிகளுக்கு எப்படி அனுமதி வழங்கினார்கள்? யார் அனுமதி வழங்கினார்கள்? போன்ற பல்வேறு கோணங்களிலும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக, புதுச்சேரியில் பதுங்கி இருந்த சுமன் சக்திவேல் மற்றும் அவரது நண்பர்கள் மூன்று பேரை புதுச்சேரி காவல்துறையினரின் உதவியுடன் கோயம்பேடு போலீசார் கைது செய்தனர். மேலும் சென்னை விருகம்பாக்கம், வளசரவாக்கம் ஆகிய பகுதிகளில் பதுங்கியிருந்த பாலகுரு, கிஷோர் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே ஏழு நபர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். குறிப்பாக மது போதையில் காரை வைத்து இடித்து இரண்டு இளம் பெண்களை கொடூரமாக கொலை செய்த சுமன் சக்திவேல், பாலகுரு, ஜோஷ்வா, கிஷோர் குமார் உள்ளிட்ட ஏழு நபர்களை கோயம்பேடு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
அதுமட்டுமின்றி தகராறு நடைபெற்ற இடமான மதுபான பாரையும் சீலிட்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த கோரச் சம்பவத்துக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN