தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநராக மகேஷ் குமார் அகர்வால் பதவியேற்பு
சென்னை, 03 ஜூன் (ஹி.ச.) கடந்தாண்டு ஆகஸ்டில் தமிழக டி.ஜி.பி.,யாக பணிபுரிந்த சங்கர் ஜிவால், ஓய்வு பெற்றதை தொடர்ந்து பொறுப்பு டி.ஜி.பி.,யாக வெங்கடராமன் நியமிக்கப்பட்டார். கடந்த ஏப்ரலில் சட்டசபை தேர்தலின்போது, வெங்கடராமன் மாற்றப்பட்டு, டி.ஜி.ப
Mahesh Kumar Agarwal Assumes Charge as Director General of Tamil Nadu Police


சென்னை, 03 ஜூன் (ஹி.ச.)

கடந்தாண்டு ஆகஸ்டில் தமிழக டி.ஜி.பி.,யாக பணிபுரிந்த சங்கர் ஜிவால், ஓய்வு பெற்றதை தொடர்ந்து பொறுப்பு டி.ஜி.பி.,யாக வெங்கடராமன் நியமிக்கப்பட்டார்.

கடந்த ஏப்ரலில் சட்டசபை தேர்தலின்போது, வெங்கடராமன் மாற்றப்பட்டு, டி.ஜி.பி.,யாக சந்தீப்ராய் ரத்தோட், தேர்தல் கமிஷனால் நியமிக்கப்பட்டார்.

சமீபத்தில் டில்லியில், யு.பி.எஸ்.சி., எனும் மத்திய அரசு பணியாளர் தேர்வு வாரிய அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் புதிய டி.ஜி.பி.,யாக மகேஷ்குமார் அகர்வால் தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில் இன்று

(ஜூன் 03) தமிழகத்தின் புதிய டி.ஜி.பி.,யாக மகேஷ்குமார் அகர்வால் பதவியேற்றுக் கொண்டார்.

மகேஷ்குமார் அகர்வால், 54, பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர். கடந்த 1994ம் ஆண்டு, 22 வயதில், தமிழக கேடர் ஐ.பி.எஸ்., அதிகாரியாக பணியில் சேர்ந்தார். 2021ல், சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக பணியாற்றினார். 10 ஆண்டுகள், சி.பி.ஐ., அதிகாரியாகவும் பணிபுரிந்துள்ளார்.

பொறுப்பேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது,

தமிழக முதலமைச்சருக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் தனது மனமார்ந்த நன்றி.

தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்கு முதன்மை முக்கியத்துவம் அளிக்கப்படும்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் தனிக்கவனம் செலுத்தப்படும்.

மேலும், இளைஞர்களைச் சீரழிக்கும் போதைப்பொருள் கலாச்சாரத்தை முற்றிலுமாக வேரறுக்க, போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும்.

மாநிலம் முழுவதும் கண்காணிப்பை பலப்படுத்தி, போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தொழில்நுட்ப வளர்ச்சியால் பெருகிவரும் சைபர் குற்றங்களைக் கட்டுப்படுத்துவதும் எனது முக்கிய இலக்குகளில் ஒன்று.

பொதுமக்கள் இணையவழி மோசடிகளில் சிக்காமல் இருக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவதோடு, குற்றவாளிகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க சிறப்புப் பிரிவுகள் மேலும் வலுப்படுத்தப்படும்.

சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி, அனைத்து தரப்பு மக்களும் அச்சமின்றி வாழும் சூழலை உருவாக்குவதே காவல்துறையின் தலையாய கடமை. அதற்காக அனைத்து காவல் அதிகாரிகளும் அர்ப்பணிப்புடன் பணியாற்றுவார்கள்

என்று மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்தார்.

Hindusthan Samachar / vidya.b