Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 03 ஜூன் (ஹி.ச.)
தலைநகர் டெல்லியின் மால்வியா நகர் பகுதியில் இயங்கி வரும் உணவகம் ஒன்றில்
இன்று காலை 9:45 மணியளவில் திடீரென தீப்பிடித்தது. தீ மளமளவென பரவியதால் உணவகத்திற்குள் இருந்தவர்கள் வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டனர்.
தகவல் அறிந்த டெல்லி தீயணைப்பு சேவை (DFS) துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். நேரு பிளேஸ் தீயணைப்பு நிலையத்தின் கோட்ட அதிகாரி ரவீந்தர் தலைமையிலான குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
தீயணைப்பு வீரர்கள் உணவகத்தின் அடித்தளத்தில் சிக்கியிருந்த 3 பேர் உட்பட மொத்தம் 11 பேரை பத்திரமாக மீட்டனர். புகை மூட்டம் மற்றும் தீயின் தீவிரத்திற்கு மத்தியில் நடந்த இந்த மீட்பு நடவடிக்கையில் யாருக்கும் உயிரிழப்பு ஏற்படவில்லை.
மீட்கப்பட்ட அனைவரும் முதலுதவி அளிக்கப்பட்டு, மத்திய விபத்து மற்றும் அவசர சிகிச்சை சேவை (CATS) ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.
தீ விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை தெரியவில்லை. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்டமாக சந்தேகிக்கப்படுகிறது.
உணவகத்தில் தீயணைப்பு பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டதா என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பந்தப்பட்ட உணவகத்தின் பெயர் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் முழு விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
Hindusthan Samachar / vidya.b