Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 03 ஜூன் (ஹி.ச.)
மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சிக்குட்பட்ட வி.எஸ். நகரைச் சேர்ந்த சரவணகுமார் (40) வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார்.
அவரது குடும்பத்தினர் மேலூரில் உள்ள வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், குடும்பத்தினர் அனைவரும் சிங்கம்புணரியில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் பங்கேற்பதற்காக வீட்டை பூட்டிவிட்டு சென்றிருந்தனர்.
திருவிழா நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பியபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, பீரோ மற்றும் பொருட்கள் அனைத்தும் சிதறிக் கிடந்ததாக கூறப்படுகிறது.
மேலும், வீட்டில் இருந்த 25 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.45 ஆயிரம் ரொக்கப் பணம் காணாமல் போனது தெரியவந்தது.
மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது குறித்து உடனடியாக மேலூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வீட்டை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் மற்றும் பிற தடயங்கள் சேகரிக்கப்பட்டன.
கொள்ளையர்கள் முன்கூட்டியே வீட்டை நோட்டமிட்டு, குடும்பத்தினர் வெளியே சென்றதை அறிந்து இந்த திருட்டில் ஈடுபட்டார்களா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள மேலூர் போலீசார், கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்களை அடையாளம் கண்டு கைது செய்ய தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
பூட்டிய வீட்டில் நடைபெற்ற இந்த துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN