பயறு வகைகள் பதப்படுத்தும் நிலையம் அமைக்க ரூ.25 லட்சம் வரை மானியம் - அமைச்சர் வினோத் அறிவிப்பு
சென்னை, 03 ஜூன் (ஹி.ச.) பயறுவகைகள் உற்பத்தியில் தமிழ்நாட்டை தன்னிறைவு அடையச் செய்யும் நோக்கில் செயல்படுத்தப்பட்டு வரும் “பயறுவகைகளில் தன்னிறைவுக்கான இயக்கம்” திட்டத்தின் கீழ், பயறுவகைகள் பதப்படுத்தும் நிலையங்கள் அமைக்க ஆர்வமுள்ள உழவர் உற்பத்தியாளர
Vinoth


Nj


சென்னை, 03 ஜூன் (ஹி.ச.)

பயறுவகைகள் உற்பத்தியில் தமிழ்நாட்டை தன்னிறைவு அடையச் செய்யும் நோக்கில் செயல்படுத்தப்பட்டு வரும் “பயறுவகைகளில் தன்னிறைவுக்கான இயக்கம்” திட்டத்தின் கீழ், பயறுவகைகள் பதப்படுத்தும் நிலையங்கள் அமைக்க ஆர்வமுள்ள உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், தொகுப்பு அளவிலான கூட்டமைப்புகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனிநபர்களுக்கு அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரை மானியம் வழங்கப்பட உள்ளதாக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் வினோத் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளதாவது,

உளுந்து, பாசிப்பயறு, துவரை மற்றும் காராமணி உள்ளிட்ட பயறுவகைப் பயிர்களின் உற்பத்தியை அதிகரித்து, மாநிலத்தின் தேவையை மாநில உற்பத்தியின் மூலம் பூர்த்தி செய்யும் நோக்கில், மத்திய மற்றும் மாநில அரசுகளின் பங்களிப்புடன் “பயறுவகைகளில் தன்னிறைவுக்கான இயக்கம்” 2025-26ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

உற்பத்தியாகும் பயறுவகைகளுக்கு மதிப்புக்கூட்டல் ஏற்படுத்தும் வகையில், பயறுவகைகள் பதப்படுத்தும் நிலையங்கள் அமைக்க இத்திட்டத்தின் கீழ் 33 சதவீத மானியமாக அதிகபட்சம் ரூ.25 லட்சம் வரை 2026-27 நிதியாண்டிலும் வழங்கப்பட உள்ளது.

செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், கரூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, திருச்சி, அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், மதுரை, தேனி, திண்டுக்கல், இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த தகுதியான பயனாளிகள் இத்திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்.

ஆர்வமுள்ள உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், தொகுப்பு அளவிலான கூட்டமைப்புகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனிநபர்கள் தங்கள் மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) அலுவலகத்தை அணுகி, 12.06.2026-க்குள் விண்ணப்பித்து இத்திட்டத்தின் பயனை பெறுமாறு அமைச்சர் வினோத் கேட்டுக்கொண்டுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ