ஏற்காடு மலைப்பாதையில் பனி சூழ்ந்த சாரல் மழை - சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்
சேலம், 03 ஜூன் (ஹி.ச.) சேலம் மாவட்டத்தின் சுற்றுலா மையமான ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பனி மூட்டத்துடன் சாரல் மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழையின் தாக்கம் மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ஏற்காடு மலைப்பகுதி முழ
ஏற்காடு மலைப்பாதையில் பனி சூழ்ந்த சாரல் மழை - சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்


சேலம், 03 ஜூன் (ஹி.ச.)

சேலம் மாவட்டத்தின் சுற்றுலா மையமான ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பனி மூட்டத்துடன் சாரல் மழை பெய்து வருகிறது.

வடகிழக்கு பருவமழையின் தாக்கம் மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ஏற்காடு மலைப்பகுதி முழுவதும் தற்போது குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.

அடர்ந்த பனிப்புகை மலைப்பாதைகளை மூடியிருப்பதால், பகல் நேரங்களிலும் எதிரே வரும் வாகனங்கள் கூட தெரியாத அளவுக்கு பார்வைத் திறன் குறைந்துள்ளது.

இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி மிகுந்த எச்சரிக்கையுடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து காவல்துறையினர் வாகன ஓட்டிகளுக்கு வேகத்தை குறைத்து செல்லுமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, இந்த இதமான காலநிலையை அனுபவிக்க சேலம், நாமக்கல், தருமபுரி உள்ளிட்ட சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஏற்காட்டில் குவிந்து வருகின்றனர்.

சாரல் மழையுடன் கூடிய பனிமூட்டம், 20 டிகிரிக்கும் குறைவான வெப்பநிலை என குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியில் அடைந்துள்ளனர்.

லேடீஸ் சீட், ஜென்ட்ஸ் சீட், அண்ணா பூங்கா, ரோஜா தோட்டம், படகு இல்லம் ஆகிய இடங்களில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. பனி சூழ்ந்த மலைப்பாதைகளில் புகைப்படங்கள் எடுத்தும், சூடான தேநீர் அருந்தியும் பயணிகள் தங்கள் விடுமுறையை கொண்டாடி வருகின்றனர்.

விடுமுறை நாட்களில் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், தங்கும் விடுதிகள் மற்றும் உணவகங்கள் முன்பதிவு நிரம்பி வருகின்றன.

மலைப்பாதையில் அடிக்கடி நிலவும் பனிமூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும் எனவும், தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறும் மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b