Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 03 ஜூன் (ஹி.ச.)
தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணி வரை ஏழு மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, தெற்கு கேரள கடலோர பகுதிகளுக்கு அடுத்துள்ள தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் 5.8 கி.மீ. உயரம் வரை ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.
அதேபோல் கிழக்கு மத்தியப் பிரதேசம் மற்றும் அதனை ஒட்டிய சத்தீஸ்கர் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சியிலிருந்து வடக்கு தமிழகம் வரை விதர்பா, தெலங்கானா, ராயலசீமா வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.
இதன் காரணமாக நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
ஜூன் 5-ம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திண்டுக்கல், தூத்துக்குடி, விருதுநகர், ஈரோடு, சேலம், கள்ளக்குறிச்சி, சிவகங்கை, மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக கோவை மாநகரில் பரவலாக மிதமான மழை பதிவாகி வருகிறது.
கோவையில் ராமநாதபுரம், சிங்காநல்லூர், புளியகுளம், கள்ளிமடை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
மேலும் தனலட்சுமிபுறம், நஞ்சுண்டபுரம், ஒண்டிப்புதூர் ஆகிய பகுதிகளில் அதிகாலை முதலே மிதமான மழை தொடர்ந்து பெய்து வருவதால் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரத்திற்கு மழையின் தாக்கம் நீடிக்கும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b