Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 03 ஜூன் (ஹி.ச.)
திருவள்ளூர் மத்திய மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆவடி சா.மு.நாசர், பக்ரீத் பண்டிகையையொட்டி நடைபெறும் குர்பானி நிகழ்வுகளுக்கு த.வெ.க. ஆட்சியில் முதன்முறையாக இடையூறு ஏற்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது;
தி.மு.க. ஆட்சிக்காலத்தில் எவ்வித தடையும் இன்றி நடைபெற்ற குர்பானி வழங்கும் நிகழ்வுகளுக்கு தற்போது தடை மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
பக்ரீத் தினத்தில் போலீசார் மூலம் அழுத்தம் கொடுத்து குர்பானி நிகழ்வுகள் தடுக்கப்பட்டதாகவும், இதனால் சிறுபான்மையின மக்களின் மனதில் வேதனை ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும், பொது இடங்களில் குர்பானி வழங்குவதற்கு தடை விதித்த உயர்நீதிமன்ற உத்தரவை அரசு முழுமையாக அமல்படுத்தியுள்ளதாக நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்திருப்பதை சுட்டிக்காட்டிய அவர், ஒருபுறம் தீர்ப்பை அமல்படுத்தியதாக கூறிக்கொண்டே மறுபுறம் மேல்முறையீடு செய்யப்படும் என அறிவிப்பது அரசின் இரட்டை நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதாக விமர்சித்துள்ளார்.
சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக உள்ள ஷாஜஹான், தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என கூறியிருப்பதையும் நாசர் கேள்விக்குட்படுத்தியுள்ளார். குர்பானி நிகழ்வுகள் தடுக்கப்பட்டபோது அமைச்சர் ஏன் தலையிடவில்லை என்றும், போலீஸ் நடவடிக்கைகளுக்கு எதிராக ஏன் குரல் கொடுக்கவில்லை என்றும் அவர் வினவியுள்ளார்.
கிறிஸ்தவ அமைப்புகள் தொடர்பான FCRA விவகாரத்திலும் முதலமைச்சர் ஜோசப் விஜய் அமைதி காத்ததாக குற்றம்சாட்டியுள்ள நாசர், சிறுபான்மையினரின் நலனைக் காக்கும் என கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் தற்போது அவர்களின் உரிமைகளில் தலையிடுவதாக விமர்சித்துள்ளார்.
குர்பானி விவகாரத்தில் நீதிமன்றத்தில் ஒரு நிலைப்பாடும், பொதுவெளியில் மற்றொரு நிலைப்பாடும் எடுக்கும் த.வெ.க. அரசு மற்றும் முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆகியோரின் செயல்பாடுகளுக்கு ஐ.யூ.எம்.எல். என்ன பதில் அளிக்கப் போகிறது என்ற கேள்வியை ஆவடி சா.மு.நாசர் எழுப்பியுள்ளார்.
Hindusthan Samachar / GOKILA arumugam