Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 03 ஜூன் (ஹி.ச)
தமிழகத்தில் நடைபெற்று வருவதாகக் கூறப்படும் சட்டவிரோத கனிம வளக் கொள்ளை மற்றும் கல்குவாரி முறைகேடுகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அறப்போர் இயக்கம் சார்பில் கனிமவளத்துறை அமைச்சர் டி.கே. பிரபுவை இன்று நேரில் சந்தித்து மூன்று முக்கிய மனுக்கள் வழங்கப்பட்டன.
இது தொடர்பாக அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்த மனுக்களின் நகல்கள் முதலமைச்சர் ஜோசப் விஜய் மற்றும் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
முதல் மனுவில், 2024-ஆம் ஆண்டு அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்புத் துறை மற்றும் அரசிடம் அளித்ததாகக் கூறப்படும் ரூ.700 கோடி மதிப்பிலான திருநெல்வேலி கல்குவாரி ஊழல் புகாரின் மீது கிரிமினல் நடவடிக்கை மற்றும் அரசுக்கு ஏற்பட்ட கனிமவள இழப்பை மீட்கும் வகையில் அபராத நடவடிக்கைகள் உடனடியாக எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
மேலும், அந்த புகாரின் அடிப்படையில் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்து விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத் துறைக்கு அரசு அனுமதி வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இரண்டாவது மனுவில், கடந்த ஆட்சிக் காலத்தில் ஜனவரி 2026-ல் கொண்டு வரப்பட்டதாகக் கூறப்படும் “One Time Regularization Scheme” தொடர்பான அரசாணையை தற்போதைய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என கோரப்பட்டுள்ளது. அவ்வாறு திரும்பப் பெறுவதன் மூலம் அரசுக்கு ஏற்படக்கூடிய ரூ.20,000 கோடி வருவாய் இழப்பை தடுக்க முடியும் என்றும் அறப்போர் இயக்கம் தெரிவித்துள்ளது.
மூன்றாவது மனுவில், தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் அனைத்து கல்குவாரிகளையும் முழுமையாக ஆய்வு செய்து, விதிமுறைகளை மீறும் குவாரிகளை சட்டப்படி மூடுவதோடு, அரசுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பை மீட்டெடுக்கவும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தியவர்கள்மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கவும் கோரப்பட்டுள்ளது. மேலும், முறைகேடுகளுக்கு துணைபோன அதிகாரிகள்மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், கல்குவாரி அனுமதிகள் தொடர்பான அனைத்து தகவல்களையும் பொதுமக்கள் பார்வைக்கு வெளிப்படையாக வெளியிட வேண்டும் என்றும், தற்போது நடைமுறையில் உள்ள இ-பாஸ் முறையில் நடைபெறுவதாகக் கூறப்படும் முறைகேடுகளை தடுத்து, எடைமேடைகள் மற்றும் சோதனைச் சாவடிகள் வழியாக எடுத்துச் செல்லப்படும் ஒவ்வொரு மெட்ரிக் டன் கனிம வளமும் அனுமதி அளவிலிருந்து நேரடியாக கணக்கிடப்படும் வகையில் வெளிப்படையான இ-பாஸ் முறையை அமல்படுத்த வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.
மேலும் பல்வேறு கோரிக்கைகளும் மனுக்களில் இடம்பெற்றுள்ளதாக அறப்போர் இயக்கம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே சில கல்குவாரிகளில் அமைச்சர் டி.கே. பிரபு ஆய்வு மேற்கொண்டு, அவற்றை தற்காலிகமாக மூடிய நடவடிக்கை வரவேற்கத்தக்கது என்றும் ஜெயராம் வெங்கடேசன் குறிப்பிட்டுள்ளார்.
அறப்போர் இயக்கம் அளித்துள்ள மனுக்களை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் டி.கே. பிரபு உறுதியளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ