Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி , 03 ஜூன் (ஹி.ச.)
அவசரகால இருப்பு
(Buffer Stock) திட்டத்தின் கீழ் வெங்காயம் கொள்முதல் விலையை 24 சதவீதம் உயர்த்தி, கிலோவுக்கு ரூ.15.80 என மத்திய அரசு நிர்ணயித்துள்ளது.
இது குறித்து மத்திய அரசு தனது அறிக்கையில் கூறுவது :
உணவுப் பொருட்களின் விலை நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கும், அவசரகால தேவைகளை சமாளிப்பதற்கும், மத்திய அரசின் விலை நிலைப்படுத்தல் நிதியத்தின் கீழ் ஆண்டுதோறும் இடையிருப்பு கையிருப்பு பராமரிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நடப்பாண்டுக்கான வெங்காய கொள்முதல் கடந்த மாதம் 15-ந்தேதி தொடங்கியது.
கொள்முதல் விலை உயர்வு
விவசாயிகளை ஊக்குவிப்பதுடன், சந்தை விலைகளை திறம்பட ஒழுங்குபடுத்தும் நோக்கிலும் வெங்காயத்தின் கொள்முதல் விலை திருத்தப்பட்டுள்ளது.
அதன்படி, கிலோவுக்கு ரூ.12.70 ஆக இருந்த கொள்முதல் விலை ரூ.15.80 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது 24 சதவீத உயர்வாகும்.
2 லட்சம் டன் இலக்கு
மத்திய அரசின் விலை நிலைப்படுத்தல் நிதியத்தின் கீழ் இந்த ஆண்டு 2 லட்சம் டன் வெங்காயத்தை கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த பணிகள் தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை குழுமம் மற்றும் தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு ஆகிய மத்திய முகமைகள் மூலம் நாடு முழுவதும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பருப்பு கையிருப்பு அதிகரிப்பு
இதற்கிடையில், உள்நாட்டு உற்பத்தி அதிகரித்திருப்பதால் வெளிநாட்டு இறக்குமதியின் தேவை குறைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக பருப்பு வகைகளின் கையிருப்பு 43 லட்சம் டன் என்ற குறிப்பிடத்தக்க அளவை எட்டியுள்ளது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA