Enter your Email Address to subscribe to our newsletters

நெய்வேலி, 03 ஜூன் (ஹி.ச.)
கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே 7 வயது மகனை கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு, தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
நெய்வேலி வடக்குத்து அண்ணா கிராமம் அரசமரத் தெருவைச் சேர்ந்த ஸ்டீபன் ராஜ் (29), தனது 7 வயது மகன் யஷ்வந்த்ராஜ் (எ) ஜெகதீஷுடன் வசித்து வந்தார்.
ஸ்டீபன் ராஜின் மனைவி பவித்ரா கடந்த 2020-ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், தந்தை மற்றும் மகன் இருவரும் தனியாக வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று நள்ளிரவில் ஸ்டீபன் ராஜ் தனது மகனை கத்தியால் கழுத்தறுத்து கொலை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். பின்னர் வீட்டின் சமையலறை பகுதியில் கயிற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தற்கொலைக்கு முன்பு தனது சகோதரிக்கு வாட்ஸ்அப் மூலம் தகவல் அனுப்பியிருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து இன்று அதிகாலை அவரது சகோதரி வீட்டிற்கு வந்து பார்த்தபோது, சிறுவன் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த நிலையில் கிடந்ததையும், மற்றொரு அறையில் ஸ்டீபன் ராஜ் தூக்கில் தொங்கியதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த நெய்வேலி நகர காவல்துறையினர், இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், கொலை மற்றும் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெற்ற மகனை கொன்றுவிட்டு தந்தை தற்கொலை செய்து கொண்ட இந்த துயரச் சம்பவம் நெய்வேலி பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P