Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 03 ஜூன் (ஹி.ச.)
அதிமுகவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம், தனது ஆதரவாளர்களுடன் 2026 பிப்ரவரி 27 அன்று அதிகாரப்பூர்வமாக திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார்.
இதன் மூலம் அதிமுகவில் பல ஆண்டுகளாக நீடித்து வந்த 'ஓபிஎஸ் அணி' என்ற தனி கட்டமைப்பு மற்றும் உட்கட்சிப் பூசல் ஒரு முடிவுக்கு வந்தது.
இந்த நிலையில் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி அணிக்கும் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கும் இடையே நீடித்து வரும் உட்கட்சிப் பூசல் தொடர்பாக, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த அனைத்து உரிமையியல் வழக்குகளையும் திரும்பப் பெறுவதாக தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு ஆஜரான ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர்கள், ஓ.பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம் உள்ளிட்ட தலைவர்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற உள்ளதாக தெரிவித்தனர்.
அதிமுக பொதுக்குழு செல்லுமா, கட்சியின் பொதுச்செயலாளர் யார் என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை எதிர்த்து இந்த வழக்குகள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்தன.
எனினும், வழக்குகளை வாபஸ் பெறுவது தொடர்பான முறையான கடிதம் மற்றும் உரிய ஆவணங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாததால், வழக்கின் விசாரணையை நீதிபதி வேறு தேதிக்கு ஒத்திவைத்தார்.
தேவையான ஆவணங்களுடன் மீண்டும் மனு தாக்கல் செய்யுமாறு ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில், எடப்பாடி பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் குறித்தும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
அந்த வழக்குகளை வாபஸ் பெறுவது தொடர்பாக இபிஎஸ் தரப்பின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து விளக்கம் பெற்று நீதிமன்றத்தில் தெரிவிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இரு தரப்பும் வழக்குகளை வாபஸ் பெறும் பட்சத்தில், நீண்ட காலமாக நீடித்து வரும் அதிமுக உட்கட்சிப் பிரச்சினையில் சுமுக தீர்வுக்கான வாய்ப்பு உருவாகலாம் என அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b