Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 03 ஜூன் (ஹி.ச.)
சென்னை பெரம்பூர் பகுதியில் உள்ள பென்னி மில் வளாகத்தில் இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே. சூர்யா நடித்து வரும் கில்லர் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை ஏற்பட்ட வெடிவிபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
படத்தின் முக்கிய காட்சிகளில் ஒன்றாக சிலிண்டர் வெடிக்கும் காட்சி படமாக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதற்காக படப்பிடிப்பு தளத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இந்த நிலையில், இன்று அதிகாலை சுமார் 5 மணி அளவில் எதிர்பாராத விதமாக சிலிண்டர் வெடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விபத்தில் படப்பிடிப்பு தளத்தில் பணியில் இருந்த 5 பேர் காயமடைந்தனர்.
அவர்களில் சிலருக்கு தீக்காயம் மற்றும் உடல் காயங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
காயமடைந்தவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனிடையே, காயமடைந்தவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
எனினும், உயிரிழந்த நபரின் அடையாளம் மற்றும் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் தொடர்பான விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
விபத்து குறித்து தகவல் அறிந்த ஓட்டேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும், அலட்சியம், பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்பட்டதா, வெடிப்புக்கான காரணம் என்ன என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P