Enter your Email Address to subscribe to our newsletters

நாமக்கல், 03 ஜூன் (ஹி.ச.)
நாமக்கல் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால், நாமக்கல்லில் இருந்து ஈரோடு நோக்கி சென்ற தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகளும் தற்போது வெளியாகியுள்ளன.
நாமக்கல் பேருந்து நிலையத்திலிருந்து ஈரோடு நோக்கி ஓட்டுநர் சிவக்குமார் இயக்கிய தனியார் பேருந்து, பள்ளிபாளையம் அருகிலுள்ள எஸ்பிபி காலனி பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது அப்பகுதியில் கனமழை பெய்து வந்ததால் சாலையில் அதிகளவில் மழைநீர் தேங்கியிருந்தது.
இதனால் பேருந்தின் சக்கரங்கள் சாலையில் வழுக்கி, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தாறுமாறாக ஓடியதாக கூறப்படுகிறது. பின்னர் சாலையோர மின்கம்பத்தில் மோதி அதை சேதப்படுத்திய பேருந்து, தொடர்ந்து சாலையின் நடுவே அமைக்கப்பட்டிருந்த தடுப்புச் சுவரில் மோதிய பின்னரே நின்றது.
விபத்து நடந்த நேரத்தில் பேருந்தில் பயணிகள் இருந்தபோதிலும், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயமோ உயிரிழப்போ ஏற்படவில்லை. இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகளில், மழைநீரால் வழுக்கும் சாலையில் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து செல்வதும், பின்னர் மின்கம்பம் மற்றும் தடுப்புச் சுவரில் மோதுவதும் பதிவாகியுள்ளது.
தொடர் மழையால் சாலைகள் வழுக்கும் நிலையில் இருப்பதால், வாகன ஓட்டிகள் கூடுதல் கவனத்துடன் பயணிக்க வேண்டும் என போக்குவரத்து துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam