காவல் நிலையத்தில் இருந்து தப்பிய விசாரணை கைதி கைது
சென்னை, 03 ஜூன் (ஹி.ச) சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் காவலில் வைக்கப்பட்டிருந்த விசாரணை கைதி விஷால், காவல்துறையினரின் கண்காணிப்பில் இருந்து தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்
காவல் நிலையத்தில் இருந்து தப்பிய விசாரணை கைதி கைது


சென்னை, 03 ஜூன் (ஹி.ச)

சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் காவலில் வைக்கப்பட்டிருந்த விசாரணை கைதி விஷால், காவல்துறையினரின் கண்காணிப்பில் இருந்து தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.

நேற்று (ஜூன் 02) நீலாங்கரை காவல் நிலையத்தில் இருந்து விஷால் தப்பியோடியதாக கூறப்படுகிறது.

தகவல் அறிந்ததும் உடனடியாக சென்னை மாநகர காவல்துறை உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. தப்பியோடிய கைதியை பிடிக்க பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

இந்நிலையில், தனிப்படை போலீசார் மேற்கொண்ட தொடர் விசாரணை மற்றும் கண்காணிப்பின் பலனாக விஷால் இன்று(ஜூன் 03) கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் எங்கு பதுங்கியிருந்தார், தப்பிக்க உதவியவர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

காவல் நிலையத்தில் இருந்து கைதி தப்பிய சம்பவம் குறித்து துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாதுகாப்பு குறைபாடு இருந்ததா என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

கைது செய்யப்பட்ட விஷால் மீது தப்பியோடியதற்காக தனி வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Hindusthan Samachar / vidya.b