திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் பெண்களுக்கு பாலியல் தொல்லை - குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைப்பு
திருவண்ணாமலை, 03 ஜூன் (ஹி.ச.) திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையைச் சுற்றி வைகாசி பௌர்ணமி தினத்தன்று கிரிவலம் சென்ற பெண் பக்தர்களுக்கு பாலியல் தொல்லை அளித்த கும்பல் தொடர்பான வழக்கில் காவல்துறை நடவடிக்கை தீவிரமடைந்துள்ளது. பௌர்ணமி நாளில் லட்சக்கணக
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் பெண்களுக்கு பாலியல் தொல்லை - குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைப்பு


திருவண்ணாமலை, 03 ஜூன் (ஹி.ச.)

திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையைச் சுற்றி வைகாசி பௌர்ணமி தினத்தன்று கிரிவலம் சென்ற பெண் பக்தர்களுக்கு பாலியல் தொல்லை அளித்த கும்பல் தொடர்பான வழக்கில் காவல்துறை நடவடிக்கை தீவிரமடைந்துள்ளது.

பௌர்ணமி நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்த வேளையில், இரவு நேர கிரிவலப் பாதையில் சென்ற பெண்களை குறிவைத்து இளைஞர்கள் கும்பல் ஒன்று அத்துமீறலில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன.

இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த புகாரின் பேரில், திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது.

முதற்கட்ட விசாரணையில், பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் ஏற்கனவே 8 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கைதானவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த சம்பவத்தில் மேலும் சிலர் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

தப்பியோடிய மூன்று முக்கிய குற்றவாளிகளை விரைந்து கைது செய்யும் நோக்கில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தனிப்படையினர் திருவண்ணாமலை மட்டுமின்றி அண்டை மாவட்டங்களிலும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

கிரிவலப் பாதையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகள், பக்தர்களின் செல்போன் வீடியோக்கள் ஆகியவற்றைக் கொண்டு தலைமறைவாக உள்ள இளைஞர்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது.

பௌர்ணமி தினங்களில் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கூடுதல் காவலர்கள் நியமிக்கப்பட்டிருந்த போதிலும் இத்தகைய சம்பவம் நடந்துள்ளது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெண்கள் பாதுகாப்புக்காக கிரிவலப் பாதையில் ரோந்துப் பணியை மேலும் தீவிரப்படுத்தவும், கண்காணிப்பு கேமராக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் காவல்துறை முடிவு செய்துள்ளது.

தலைமறைவாக உள்ள மூன்று பேரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் எனவும், குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b