Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 03 ஜூன் (ஹி.ச)
மத்திய கல்வித் துறையின் செயல்பாடுகளில் ஏற்பட்டுள்ள தொடர் குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) மாநில செயலாளர் சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில்,
இந்த ஆண்டில் மட்டும் நீட் தேர்வில் கேள்வித்தாள் கசிவு உள்ளிட்ட பிரச்சினைகள் எழுந்து தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளன. கியூட் (CUET) தேர்வும் முறையாக நடத்தப்படாமல் பாதிக்கப்பட்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சிபிஎஸ்இ தேர்வுகளிலும் குளறுபடிகள் ஏற்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கல்வித் துறையின் மிக முக்கியமான பொறுப்பு தேர்வுகளை நேர்மையாகவும், வெளிப்படையாகவும், முறையாகவும் நடத்துவதாகும். ஆனால் தொடர்ந்து தேர்வு நடத்துவதிலேயே மத்திய அரசின் கல்வித் துறை தோல்வியடைந்து வருவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
கல்வி அமைச்சகம் முதல் பல்வேறு நிர்வாக மட்டங்கள் வரை நடைபெறும் ஊழல், முறைகேடு மற்றும் பொறுப்பற்ற செயல்பாடுகள் காரணமாக லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சண்முகம் தெரிவித்துள்ளார்.
எனவே, இந்த தொடர் தோல்விகளுக்கும் நிர்வாக குறைபாடுகளுக்கும் தார்மீகப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று சிபிஐ மாநில செயலாளர் சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ