Enter your Email Address to subscribe to our newsletters

பெங்களூரு, 03 ஜூன் (ஹி.ச.)
கர்நாடக மாநிலத்தின் முதல்வர் பதவியில் இருந்து விலகிய மூத்த காங்கிரஸ் தலைவர் சித்தராமையாவுக்கு, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட முடிவெடுக்கும் குழுவான காரிய கமிட்டியில் உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
காரிய கமிட்டி என்பது காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளை வகுக்கும், அமைப்பு முடிவுகளை எடுக்கும் உயரிய அதிகார அமைப்பாகும்.
கடந்த மே 28-ம் தேதி முதல்வர் பதவியை ராஜினாமா செய்த அவருக்கு, உடனடியாக அமலுக்கு வரும் வகையில் இந்த நியமனத்தை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறிவித்துள்ளார்.
2023-ம் ஆண்டு கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதில் இருந்தே முதல்வர் பதவிக்கு சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே.சிவகுமார் இடையே போட்டி நிலவி வந்தது. இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு தலைமை மாற்றம் செய்யப்படும் என்ற உள்கட்சி உடன்பாட்டின் அடிப்படையில், மேலிடத்தின் அறிவுறுத்தலை ஏற்று சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலிடம் கேட்டபோது தானாகவே ராஜினாமா செய்தேன் என அவர் தெரிவித்திருந்தார்.
இன்று (ஜூன் 3-ம் தேதி) பெங்களூருவில் டி.கே.சிவகுமார் முதல்வராக பதவியேற்க உள்ளார். சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சிக் கூட்டத்தில் சித்தராமையாவே சிவகுமாரின் பெயரை முன்மொழிந்தது குறிப்பிடத்தக்கது.
77 வயதாகும் சித்தராமையாவுக்கு காரிய கமிட்டி உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது கட்சியில் அவரது செல்வாக்கை உறுதி செய்வதாக அமைந்துள்ளது.
இதற்கு முன்னர் 2018-ல் ராகுல் காந்தி தலைமையில் காரிய கமிட்டி மறுசீரமைக்கப்பட்டபோது அவர் உறுப்பினராக இருந்தார். 2019-ல் கர்நாடக எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டபோது அந்தப் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். தற்போது மீண்டும் உயர்மட்டக் குழுவில் இடம்பெற்றுள்ளார்.
பதவி விலகலுக்கு ஈடாக ராஜ்யசபா உறுப்பினர் பதவியை ஏற்குமாறு காங்கிரஸ் மேலிடம் வழங்கிய வாய்ப்பை சித்தராமையா நிராகரித்துள்ளார்.தேசிய அரசியலில் எனக்கு விருப்பமில்லை. மக்கள் என்னை 5 ஆண்டுகளுக்கு தேர்ந்தெடுத்துள்ளனர். இன்னும் இரண்டு ஆண்டுகள் பதவிக்காலம் உள்ளது என அவர் கூறியுள்ளார். மாநில அரசியலிலேயே தொடர்ந்து செயல்பட விரும்புவதாகவும் தெரிவித்தார்.
2013-2018 மற்றும் 2023-2026 என இரண்டு முறை முதல்வராக பதவி வகித்த சித்தராமையா, கர்நாடக வரலாற்றில் அதிக காலம் முதல்வராக இருந்தவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். தேவராஜ் அரசின் சாதனையை முறியடித்து எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்துள்ளார்.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்ட அறிக்கையில், கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் ஒப்புதலுடன் இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b