Enter your Email Address to subscribe to our newsletters

புதுச்சேரி, 03 ஜூன் (ஹி.ச.)
புதுச்சேரி அரசு ஊழியர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவன பணியாளர்கள் எரிபொருள் மற்றும் மின்சார பயன்பாட்டை வெகுவாக குறைக்கும் நோக்கில் அரசு பல்வேறு அதிரடி கட்டுப்பாடுகளை விதித்து சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
புதுச்சேரி பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையின் சார்பு செயலர் சார்பில் அனைத்து அரசு துறைகள் மற்றும் அரசு சார்பு நிறுவனங்களுக்கு இந்த உத்தரவு அனுப்பப்பட்டுள்ளது.
அரசின் செலவினங்களை கட்டுப்படுத்தவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் எரிசக்தி சேமிப்பை ஊக்குவிக்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அரசு ஊழியர்கள் மதிய உணவு இடைவேளையின்போது வீடுகளுக்கு செல்லக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஊழியர்கள் அலுவலகத்திலேயே அல்லது அருகிலுள்ள இடங்களில் உணவருந்திக்கொள்ள வேண்டும். இதன் மூலம் வாகன பயன்பாடு குறைந்து எரிபொருள் சேமிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், அடுத்த ஆறு மாதங்களுக்கு அரசு அலுவல் சார்ந்த வெளிநாட்டு பயணங்களுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அவசியம் ஏற்பட்டால் மட்டுமே உரிய உயர் அதிகாரிகளின் அனுமதியுடன் பயணம் மேற்கொள்ள வேண்டும் என திட்டவட்டமாக கூறப்பட்டுள்ளது.
துறை ரீதியான ஆய்வுக் கூட்டங்கள், கலந்தாலோசனை கூட்டங்கள் போன்றவற்றை நேரடியாக கூடாமல் காணொலி காட்சி வாயிலாகவே நடத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் அதிகாரிகளின் பயணச் செலவு மற்றும் எரிபொருள் செலவு பெருமளவு குறையும்.
மின்சார சேமிப்பை வலியுறுத்தி, அனைத்து அரசு அலுவலகங்களிலும் பயன்பாட்டில் இல்லாத மின்விசிறிகள், விளக்குகள், குளிரூட்டிகள் மற்றும் இதர மின் சாதனங்களை உடனடியாக அணைக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அலுவலக நேரம் முடிந்த பின்னர் அனைத்து மின் சாதனங்களையும் முழுமையாக நிறுத்துவதை உறுதி செய்ய அலுவலக தலைவர்களுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த கட்டுப்பாடுகள் அரசு துறைகளுக்கு மட்டுமின்றி தனியார் நிறுவனங்களுக்கும் பொருந்தும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எரிசக்தி நெருக்கடி மற்றும் நிதி சுமையை கருத்தில் கொண்டு அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கை புதுச்சேரி அரசு ஊழியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b