தமிழ்நாட்டின் புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியாக இன்று பொறுப்பேற்கிறார் மகேஷ்குமார் அகர்வால்
தமிழ்நாடு, 03 ஜூன்(ஹி.ச.) தமிழக காவல்துறையின் தலைமைப் பொறுப்பான டிஜிபி பதவிக்கு ஐபிஎஸ் அதிகாரி மகேஷ் குமார் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் இன்று காலை சென்னை டிஜிபி அலுவலகத்தில் பொறுப்பேற்க உள்ளார். தமிழக சட்டசபை தேர்தல் கடந்த ஏப்ரல் 2
மகேஷ்குமார் அகர்வால்


தமிழ்நாடு, 03 ஜூன்(ஹி.ச.)

தமிழக காவல்துறையின் தலைமைப் பொறுப்பான டிஜிபி பதவிக்கு ஐபிஎஸ் அதிகாரி மகேஷ் குமார் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் இன்று காலை சென்னை டிஜிபி அலுவலகத்தில் பொறுப்பேற்க உள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தல் கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. தேர்தலை முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி பல்வேறு நிர்வாக மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதன் ஒரு பகுதியாக, சந்தீப் ராய் ரத்தோர் தமிழகத்தின் பொறுப்பு டிஜிபியாக நியமிக்கப்பட்டு பணியாற்றி வந்தார்.

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, விஜய் தலைமையில் புதிய அரசு பதவியேற்றது. இதையடுத்து, நிரந்தர டிஜிபி நியமனத்திற்கான நடைமுறைகள் தொடங்கப்பட்டன.

டிஜிபி பதவிக்கான தேர்வில் மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளான ராஜீவ் குமார், சந்தீப் ராய் ரத்தோர் மற்றும் மகேஷ் குமார் அகர்வால் ஆகியோரின் பெயர்கள் அடங்கிய பட்டியல் யுபிஎஸ்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

டெல்லியில் நடைபெற்ற யு.பி.எஸ்.சி. தேர்வுக்குழுக் கூட்டத்தில் இந்த மூவரின் பெயர்களும் பரிசீலிக்கப்பட்டு, பட்டியலுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தமிழக காவல்துறையின் உயரிய பதவியான டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமிக்கப்பட்டார்.

புதிய டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ள மகேஷ் குமார் அகர்வால், இன்று காலை 10.45 மணியளவில் சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள டிஜிபி அலுவலகத்தில் அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்க உள்ளார்.

தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ள சூழலில், சட்டம்-ஒழுங்கு, குற்றத் தடுப்பு, சைபர் குற்றங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் புதிய டிஜிபியின் செயல்பாடுகள் முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P