திண்டுக்கல்லில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள மதுபான விடுதி - இடமாற்றம் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை, 03 ஜூன் (ஹி.ச.) திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த நாகராஜன், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், திண்டுக்கல்–பழனி சாலையில் செயல்பட்டு வரும் ஹனிபி மனமகிழ் மன்றம் என்ற தனியார் மதுபான விடுதி விதிமுறைகளுக்கு மு
உயர்நீதிமன்ற மதுரை கிளை


மதுரை, 03 ஜூன் (ஹி.ச.)

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த நாகராஜன், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில்,

திண்டுக்கல்–பழனி சாலையில் செயல்பட்டு வரும் ஹனிபி மனமகிழ் மன்றம் என்ற தனியார் மதுபான விடுதி விதிமுறைகளுக்கு முரணாக அமைந்துள்ளதாக தெரிவித்திருந்தார்.

அந்த மனுவில், மதுபான விடுதியின் அருகில் சிவன் கோவில், மருத்துவமனை, காய்கறி சந்தை உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் உள்ளதாகவும், குறிப்பாக பெண்கள் மற்றும் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் அச்சத்துடன் அந்தப் பகுதியைக் கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும், மாலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்படுவதாக மனுதாரர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்த பிரச்சினை குறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால், பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ள அந்த மதுபான விடுதியை மூட உத்தரவிட வேண்டும் என்று கோரி வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் ஜோதி ராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மதுபான விடுதி நெடுஞ்சாலை ஓரத்தில் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் பகுதியில் அமைந்துள்ளதுடன், விதிமுறைகளுக்கும் முரணாக செயல்படுவதாக வாதிட்டார். அதனால் உடனடியாக கடையை மூட உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்ட நிலையில், நீதிபதிகள், கடையைச் சுற்றி கோவில், மருத்துவமனை மற்றும் காய்கறி சந்தை அமைந்திருப்பது புகைப்படங்களில் தெளிவாகத் தெரிகிறது என்றும், இத்தகைய இடத்தில் செயல்படும் மதுபான விடுதியை ஏன் அகற்றவில்லை என்றும் கேள்வி எழுப்பினர்.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட மதுபான விடுதியை மூடுவதற்கோ அல்லது வேறு இடத்திற்கு மாற்றுவதற்கோ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மற்றும் மதுவிலக்கு ஆணையாளர் தரப்பில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam